Saturday, March 27, 2010

557.மற்றுமொரு தோல்வி -CSK vs MI -IPL

இந்த மேட்சை பார்க்க ஆபிசிலிருந்து சீக்கிரம் வந்து விட்டேன்! தோனி சச்சினுடன் டாஸுக்கு வந்தது வயிற்றில் பாலை வார்த்தது. சச்சின் சென்னை அணியை பேட் செய்ய அழைத்தார். நாம் டாஸில் ஜெயித்திருந்தாலும், பேட் செய்திருப்போம் என்பது என் அனுமானம்.

ஜாகீரை ஒரு ஓவரில், மங்கூஸ் துணையின்றி, 4 பவுண்டரிகள் அடித்த ஹெய்டன் ரொம்ப நேரம் தாக்குப் பிடிக்கவில்லை, ஹர்பஜன் பந்து வீச்சில் அவுட்! பார்த்திவ்வும் (இவரை யாரோ குட்டி ஹெய்டன் என்றதற்கு எதால் சிரிப்பது என்று தெரியவில்லை!) சீக்கிரமே ஆட்டமிழந்தார். தோனி அணிக்குத் திரும்பியதால், confidence personified ஆக ரெய்னா பயமின்றி விளையாடியது, நல்ல பலனைத் தந்தது. முதலில் நிதானமாக ஆடிய பத்ரியும், ரெய்னாவும் ரன்களை குவிக்க ஆரம்பித்தனர், மும்பை தரப்பில் மெக்லாரனும், ஹர்பஜனும் சிறப்பாக பந்து வீசியபோதும்!

இருவரும் 15 ஓவர்கள் ஜோடி சேர்ந்து ஆடியதில், ஸ்கோரை 38லிருந்து 180க்கு எடுத்துச் சென்றனர். அதாவது, 15 ஓவர்களில் 142 ரன்கள் (9.47 பிரதி ஓவருக்கு). இன்னும் ஒரு 10 ரன்கள் எடுத்திருக்கலாம் தான் என்றாலும், 180 என்பது defend செய்யத் தக்கதே என்பது என் கருத்து!

இப்படிச் சொல்லக் காரணங்கள் உள்ளன!

1. முரளியும், மார்க்கலும் நல்ல பந்து வீச்சாளர்கள் என்பதில் சந்தேகமே வேண்டாம், அஷ்வினுக்கு பதிலாக வந்த ஜகதியும் மோசமான பந்து வீச்சாளர் இல்லை! பாலாஜியும், ஜோகீந்தரும் ஓரளவு ஈடு கொடுத்தால், மும்பையை கலங்கடிக்க முடியும்!

2. மும்பை அணியில் சச்சினைத் தவிர மற்றவர் ஆவரேஜ் பேட்ஸ்மேன்கள் தான். ப்ரேவோ, போலார்ட் இருவரும் சுழற்பந்து வீச்சை எதிர்கொள்ளத் தடுமாறுபவர்கள்! தவான், திவாரி, சதீஷ் எல்லாம் நேற்றைய மழையின் காளான்கள் வகை, பிரஷரை எதிர்கொள்ளும் திறன் அற்றவர்கள்!

தோனியின் பந்துக் காப்பமைப்பும் (Field placement) பந்து வீச்சு மாற்றங்களும் நேற்று சோபிக்கவில்லை! இடையில் 3 மேட்ச்கள் ஆடாதது காரணமாக இருக்கலாம். பாலாஜி, ஜோகீந்தர் புண்ணியத்தில், தவான் செட்டில் ஆகி நம்மை ஒரு வாங்கு வாங்கினார். சச்சின் விளாசலை ஏற்றுக் கொள்ளலாம். தவானையெல்லாம் வளர்த்து விடுவது கொடுமையின் உச்சம்! இருந்தும், 92 for no loss (8.5 ஓவர்கள்) நிலையிலிருந்து மும்பை 120-3 (13.2) என்ற நிலைக்கு வந்ததற்கு முரளியும், ஜகதியும் தான் காரணம். சென்னைக்கு கொஞ்சம் தெம்பு வந்தது!

கடைசி 5 ஓவர்களில், 48 ரன்கள் (RR 9.6) தேவை என்ற நிலையில், Match was interestingly poised. அப்போது தான் தோனி ஒரு பெரும் தவறிழைத்தார்! தனது முதல் மேட்ச் ஆடும் பெரேராவை 16வது ஓவரை வீச அழைத்தார். ஒரு பந்தைக் கூட பிட்ச் பண்ணத் துப்பில்லாத அந்த அறிவிலி, அந்த ஓவரில் 19 ரன்கள் (4 பவுண்டரிகள்) வாரி வழங்கினார்!!! அதன் பின், போலார்டும், சச்சினும் விக்கெட்டிழந்தும் பயனொன்றுமில்லை. சென்னை அணியின் மூன்றாவது தொடர் தோல்வி இது!

KXIPக்கு எதிரான மேட்ச்சில் 2 பந்துகளில் 1 ரன் அடிக்கத் துப்பில்லாத அஷ்வின் அத்தோல்விக்கு முக்கியக் காரணமானார். மும்பைக்கு எதிரான தோல்விக்கு (மேட்ச் மும்பை பக்கம் திரும்பியதற்கு!) பெரேராவின் பந்து வீச்சே காரணம்! டிவிட்டர் நண்பர் ஒருவர் (http://twitter.com/mu75) கூறியதைச் சுட்டுவது பொருத்தமாக இருக்கும்:
It is written. How Sinhalese can win a match for Chennai? :-(

நமது பந்து வீச்சு, முரளி, மார்க்கல் தவிர்த்து, படு சுமாராய் காட்சியளிப்பதை வைத்துப் பார்க்கையில், சென்னை அணி செமிஃபைனலுக்கு தேர்வாகும் என்று தோன்றவில்லை! நமது பேட்டிங்கை வைத்து, 136 ரன்கள் இலக்கையும் அடைய முடியவில்லை, நமது பந்துவீச்சை வைத்து, 180 ரன்கள் இலக்கையும் டிஃபண்ட் பண்ண முடியவில்லை :( என்ன இழவு பிரச்சினையோ?

எ.அ.பாலா

Monday, March 22, 2010

556. நமக்கு எதிரி நாம் தான் - சேப்பாக்கம் IPL -CSK vs KXIP

(நேற்று) ஞாயிறு காலை எழுந்தவுடன் அன்று சேப்பாக்கத்தில் நடைபெறவிருந்த (சென்னை - பஞ்சாப் அணிகளுக்கு இடையே ஆன) ஐபிஎல் டி-20 மேட்ச்சை அரங்கத்தில் பார்க்க வேண்டும் என்று ஏன் தோன்றியது என்று தெரியவில்லை. எழுந்திருந்தபோதே லேசாக இருந்த மைக்ரைன் காரணமாக இருக்கலாம்!

சென்னை ஐபிஎல் ஆட்டங்கள் எல்லாவற்றுக்கும் டிக்கெட் விற்பனை முடிந்து விட்ட நிலையில், நண்பன் ஒருவனை தொடர்பு கொண்டு கேட்டதில், ஆபத்பந்தவனாக, அனாதரட்சகனாக, "கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் 2 காம்ப்ளிமெண்ட்ரி டிக்கட் கிடைச்சுது, உனக்குத் தான் ஃபோன் பண்ணலாம்னு இருந்தா, நீயே பண்ணிட்டே!!" என்று நெஞ்சில் பாலை வார்த்தான் :-) மாத்திரையை போட்டு மைக்ரைனை விரட்டி, 3-4 வருடங்களுக்குப் பின் சேப்பாக்கம் செல்லத் தயாரானேன் (நண்பனுடன்).

அரங்கம் அமைந்துள்ள பெல்ஸ் சாலையில், அரங்கத்திலிருந்து எழுந்த பேரிரைச்சலாலும், சிவமணியின் டிரம்ஸாலும், மிதமான நிலநடுக்கத்தை உணர முடிந்தது! கொடி, தொப்பி, டி-ஷர்ட், bandana, ஊதுகுழல் விற்பவர்கள், 10 ரூபாய்க்கு மூஞ்சியில் படம் வரைந்து உங்களை CSK வெறியராக மாற்றுபவர்கள், ரசிகர் கூட்டம் என்று ஜேஜே என்றிருந்த அச்சாலையில் நடக்கையில் உற்சாகம் பற்றிக் கொண்டது. அரங்கத்தில்நுழைவதற்கு முன், செலவழித்த ஒரு 30 நிமிடங்கள் இவ்விடுகைக்கு தேவையில்லாதது ;)

வாலாஜா சாலையில் இருந்த D-Stand நுழைவு வாயிலில் புகுந்து, செக்யூரிட்டி செக் முடிந்ததும், பச்சை பசேலென அரங்க (ரங்கநாதரும் பச்சை மாமலை மேனி தான்!) தரிசனம்! ஃப்ளட் லைட் ஒளி வெள்ளம் இரவை பகலென ஏமாற்றிக் காட்டியது. அரங்குக்கு வெளியே திருமங்கையாழ்வார் பாடிய திருவல்லிக்கேணி, உள்ளே அமெரிக்கா! உட்சூழல், தோற்றத்தைச் சொல்கிறேன். ஹைடெக் காபி மெஷின், குளிர்பானங்கள், அக்வாஃபினா, சியர் லீடர்ஸ், அதிரும் ராக் இசை என்று அமெரிக்கத்தனம் தெரிந்தாலும், கழிவறைப்பக்கம் சென்றவுடன் சந்தேகம் தீர்ந்து விட்டது!

(KXIP) சியர் லீடர்சுக்கு அருகில், நேர் எதிராக இருக்கையை தேர்ந்தெடுத்தேன். ஐபிஎல்-லை பொருத்தவரை கிரிக்கெட் மட்டுமே நோக்கமாக இருப்பது தகாத ஒன்று! இதை மகான் லலித் மோடியே திருவாய் மலர்ந்து அருளியிருக்கிறார்!

டாஸ் வென்ற சென்னை அணி, பஞ்சாபை பேட்டிங் செய்ய அழைத்தது! பஞ்சாப் ஆட்டத்தில் சுவாரசியமாக ஒன்றும் இல்லை. மற்ற வீரர்கள் சொதப்பியதில், விக்கெட் ரெகுலராக விழுந்ததில், யுவராஜ் கூட ரன் ரேட்டை உயர்த்த முடியாமல் தத்தளித்தார், 2 அட்டகாசமான சிக்ஸர்களை அடித்தாலும்! பஞ்சாபின் சொதப்பல் தந்த கடுப்பை பெருமளவு குறைத்த பெருமை சிவப்பு உடையில் ஜொலித்த பஞ்சாப் சியர் லீடர்ஸையே சாரும்! சியர் லீடர்ஸ் ஆட்டம், பஞ்சாப் அணியின் ஆட்டத்தை விட எவ்வளவோ மேல்! தமிழ் குத்துப் பாட்டுகளுக்கு (அப்டி போடு போடு, நாக்கமுக்க, ஓடிப்போயி, வேர் இஸ் தி பார்ட்டி..) அவர்கள் improvise பண்ணி ஆடியது சூப்பர் :-) (ஆடிய மூன்றில், 2 பிளாண்ட், 1 புருனட் என்பது வாசகர்களுக்கு கூடுதல் தகவல்!)

சியர் லீடர்ஸே இப்படி imrpovise பண்ணி கலக்கியபோது, பஞ்சாப் சிங்கங்கள் ஒன்று கூட improvise பண்ணி அதிரடியாக ஆடாததற்குக் காரணம், தோனியில்லாத சென்னை சோனிகளுக்கு அதெல்லாம் தேவையில்லை என்று அவர்கள் நினைப்பாக இருக்கலாம் :-)

யுவராஜ் 43 (28 பந்துகள்); பஞ்சாப் 136 ரன்களில் சுருண்டது! முரளி தன் உலகத்தரத்தை நிரூபிக்கும் வகையில் அபாரமாக பந்து வீசியது தான் ஹைலைட் (4-0-16-3) ஆஹா, சென்னை மிக எளிதாக வென்று விடும் என்று தான் எண்ணினேன், பார்த்திவ் படேலும், ஹெய்டனும் 6.5 ஓவர்களில் 50 தொட்டபோது! சென்னை அணி 12.3 ஓவர்களில் 96-2 (ரெய்னா அவுட்). தேவையான ரன் ரேட், 5.47 மட்டுமே! (8 விக்கெட்கள் வைத்துக் கொண்டு டெஸ்ட் மேட்ச்சில் கூட இவ்விலக்கு சுலபமானது).

சென்னைக் கோமாளிகள் முரளி விஜயும், பத்ரிநாத்தும் மூளையை கழட்டி வைத்து விட்டு ஆடியதில், ஸ்கோர் 104-4, பா.படேலும், கோனியும் தொடர்ந்து வெளியேறியபோது, ஆட்டம் TIE ஆகப் போகிறது என்று விளையாட்டாய் நண்பனிடம் சொன்னேன், அவன் என்னை விட டென்ஷனில் நகம் கடித்துக் கொண்டிருந்தான். இறுதியாக (நாம் வெல்ல) ஒரு வாய்ப்பு (2 பந்துகள் ஒரே ஒரு ரன்!) இருந்தபோது, மற்றொரு சென்னைக் கோமாளி அஷ்வின், ஒரு பந்தில் ரன் எடுக்க முடியாமல், அடுத்த பந்தில் அவுட்டானார். பஞ்சாப் தரப்பில் ரமேஷ் போவாரும், தென்னாப்பிரிக்க வீரர் யுவான் தெரானும் சிறப்பாக பந்து வீசினர்!

அடுத்து நடந்த சூப்பர் ஓவர் அவலத்தைப் பற்றிச் சொல்ல பெரிதாக எதுவுமில்லை! சென்னை அணி மண்ணைக் கவ்வியது :-( இப்படியாக சில ஆண்டுகளுக்குப் பிறகான என் சேப்பாக்கம் விஜயம் சோகத்தில் முடிந்தது!

இறுதியாக, டிவிட்டரில் கிரிக்கெட் விமர்சக "ஐயா" ஒருவர், 50 ரன்கள் அடித்து, 121 வரை ஸ்கோரை இட்டு வந்த பா.பட்டேல் தான் சென்னைத் தோல்விக்குக் காரணம் என்று ஒரே போடாக போட்டார்! சே, இவரை மாதிரியெல்லாம் வித்தியாசமாக, புத்திசாலித்தனமாக நம்மால் யோசிக்க முடியலையே என்று ஒரே ஆதங்கமாகப் போய் விட்டது ;-)

எ.அ.பாலா

Thursday, March 04, 2010

555. கல்கியில் நண்பர் பாசிடிவ் அந்தோணியின் கட்டுரை

எனது அந்தோணிக்கு உதவி வேண்டி என்ற இடுகையின் வாயிலாக அந்தோணியுடனான நட்பு தொடங்கியது. அசாத்தியமான தன்னம்பிக்கையும், தன் உழைப்பில் சம்பாதித்து வாழ வேண்டும் என்ற திடமான எண்ணமும் மிக்கவர் என்பதை முதல் சந்திப்பிலேயே புரிந்து கொள்ள முடிந்தது. மனச் சோர்வான சில சமயங்களில், அவருடன் பேசி மனத்தெளிவடைந்திருக்கிறேன். அந்தோணி தொடர்பான என் இடுகைகள் கீழே:

http://balaji_ammu.blogspot.com/2008/08/452.html

http://balaji_ammu.blogspot.com/2008/04/431.html

சமீபத்திய கல்கி சுயமுன்னேற்றச் சிறப்பிதழில் (07.03.2010) அந்தோணியின் கட்டுரை வெளிவந்திருக்கிறது. அதை ஸ்கேன் செய்து இட்டிருக்கிறேன். கிளிக் செய்து பெரிதாக்கி வாசிக்கவும்.

இலக்குகள் பற்றி அந்தோணியைக் கேட்டால்,
"தன்னம்பிக்கை, சுயமுன்னேற்றம் இவற்றில் அடிப்படையிலான துறையில் சுயபரிசோதனைகளை சகமானுடத்துடன் பகிர வேண்டும். கேட்பவர்களுக்கெல்லாம் இல்லை என்று சொல்லாது கொடுக்கும் நிலைக்கு உயர வேண்டும்" என்கிறார்.
என்ன ஒரு உயர்வான சிந்தனை! வாழ்க!



அன்புடன்
பாலா

Wednesday, January 20, 2010

554. "சிக்க" திருப்பதி !

பொங்கல் விடுமுறையில் குடும்ப சகிதம் பங்களூரு சென்றிருந்தேன். வெண்களத்துக்கு (அதாங்க ஒயிட்ஃபீல்டு) அருகில் ஒரு ஹோட்டலில் வாசம். மூத்தவள் ரொம்ப நாளாகப் போக வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்த விஸ்வேஸ்வரா மியூசியத்திற்கு விஜயம். நான் பல வருடங்களுக்கு முன் அங்கு சென்றதாக ஞாபகம். கட்டாயம் பார்க்க வேண்டிய இடங்களுள் ஒன்று.
இடுகையில் உள்ள படங்களை கிளிக்கி பெரிதாக்கிப் பார்க்கவும்.
பல அறிவியல் விதிகளை விளக்கும் காட்சிகள்/மாடல்கள், புராதனப் பொருட்கள், அறிவியல் உபகரணங்கள், அந்தக்காலத்து நீராவி எஞ்சின், ரைட் சகோதரர்கள் கண்டுபிடித்த விமானத்தின் மாடல் என்று பல விஷயங்களை பார்க்க முடிந்தது.

ஜுராசிக் பார்க் படத்தில் பார்த்ததைப் போன்ற (சற்று அளவில் சிறிய) டைனோசர் ஒன்று நிமிடத்திற்கு ஒரு முறை தலையையும் வாலையும் ஆட்டி "எனக்கு சாப்பாடு போடுவியா மாட்டியா?" என்ற வகையில் ஒரு அறையில் உறுமிக் கொண்டிருந்தது!
சரி, இடுகையின் தலைப்பு மேட்டருக்கு வருவோம்! நாங்கள் தங்கியிருந்த இடத்துக்கு கொஞ்ச தூரத்தில் சிக்க திருப்பதி என்ற கோயில் இருப்பதாக கேள்விப்பட்டு, பெருமாளை பார்க்காமல் போனால் அவர் கோச்சுப்பாரே என்ற எண்ணத்தில், அங்கு செல்ல முடிவெடுத்தேன். Hope Farm என்ற நிறுத்தத்திலிருந்து சிக்க திருப்பதிக்கு பஸ் போவதாக ஹோட்டல் ரிசப்ஷனிஸ்ட் ஹேளியருளினாள். நடக்கும் தூரம் தான் என்றும் கூறினாள்.

பெருமாள் சோதிக்க ஆரம்பித்தார். ஹோப் ஃபார்ம் எந்தப்பக்கம் என்று நான் விசாரித்த யாருக்கும் தெரியவில்லை! சற்று ஆங்கிலப் பரிச்சயம் உடைய புண்ணியவான் ஒருவர், 'ஹோப் ஃபார்ம் என்று கேட்கக்கூடாது, ஓ-ஃபார்ம் என்று கேட்டால் தான் இங்கு புரியும்' என்று என் தத்துவ விசாரத்துக்கு மாபெரும் முற்றுப்புள்ளி வைத்தார்! 'சே, ஹோப் ஃபார்ம் என்பதற்கு கன்னடத்தில் ஓ-ஃபார்ம் என்று கூட அறியாத ஜடமாக இருக்கிறோமே' என்று ஆற்றாமையாக இருந்தது!

ஓ-ஃபார்ம் பஸ் நிறுத்தத்தில் கலர்ச்சட்டை அணிந்த நபர் ஒருவரிடம், சிக்க திருப்பதி பஸ் பற்றி விசாரித்ததில், வழக்கமாக வரும் பஸ் அன்று லேட் என்று கூறினார். நம்பர் இல்லாத பஸ் ஒன்று வர, கலர்ச்சட்டைக்காரர் 'பன்னி பன்னி' (பன்னி என்றால் கன்னடத்தில் வாங்க என்பதை அறிந்ததால் அவர் என்னைத் திட்டவில்லை என்று திடமாக புரிந்தது!) என்று தானும் பஸ்ஸில் ஏறிக் கொண்டு, 'எத்தனை டிக்கட்?' என்றார்! அவர் தான் நடத்துனர் என்பது உரைத்தது. பஸ் நிறுத்தத்தில் பயணிகளோடு பஸ்சில் ஏறும் நடத்துனரைப் பார்க்க அதிசயமாக இருந்தது.

பணத்தைப் பெற்றுக் கொண்டு, பில் புத்தகம் மாதிரி இருந்த நோட்டிலிருந்த ஒரு மஞ்சள் கலர் சாணிப் பேப்பரில் தொகையை எழுதி, கிழித்து என்னிடம் கொடுத்தார். இந்தியாவின் சிலிக்கன் வேலிக்கு (Valley) அருகில் உள்ள ஒரு இடத்தில் டிக்கட் கொடுக்கும் அழகைப் பாருங்கள்! "சிக்க திருப்பதி போக இந்த டிக்கட் போதுமில்லையா?" என்று வினவியதற்கு, 'இதை வைத்துக் கொண்டு நேரா வைகுண்டம் வரை போகலாம்' என்பது போல ஒரு புன்னகையை அருளி என்னை ஆசுவாசப்படுத்தினர்! பஸ்சில் கூட்டம் அவ்வளவாக இல்லை. சாலையும் அத்தனை மோசமில்லை. சாலையோரப் பசுமை, சில்லெனக் காற்று என்று 25 கிமீ பயணம் மனதுக்கு ரம்யமாகவே அமைந்தது.
சிக்க திருப்பதி போய் சேர்ந்தோம். பெயருக்கு ஏற்றாற்போல, அழகான, "சிக்க" கோபுர தரிசனம்! கோயிலில் கூட்டமும் "சிக்க" தான்! அர்ச்சனை தட்டு வாங்கிய கடையில் இருந்த பெண்மணி, 2 தேங்காய்கள் வாங்கிச் செல்ல வேண்டும் என்றார். ஏன் என்றதற்கு, 'பெருமாளுக்கு ஒன்று, லஷ்மிக்கு ஒன்று' என்று கூறி ஒரு பேருண்மையை எனக்குப் புலப்படுத்தினார். சரி, இவ்வளவு தூரம் வந்தாயிற்று, புண்ணியத்தின் முழுப்பலனை ஒரு 10ரூ தேங்காயினால் தவற விடக்கூடாது என்று 2 தேங்காய்களை வாங்கினேன்.
கோயில் உள்ளே நுழைந்தவுடன், ஒரிஜினல் திருப்பதி போலவே, சிக்க திருப்பதியையும் வடகலையார்கள் டேக் ஓவர் பண்ணியிருப்பது விளங்கியது :-) கோயிலில் அர்ச்சனை டிக்கட் வாங்கிக் கொண்டு, மூலஸ்தானத்திற்குள் செல்ல வழி கேட்டபோது, கோயில் ஆசாமி, ஒரு பெரிய கல் மேடையைக் காட்டி, 'தேங்காய்களை நீங்களே உடைத்து அர்ச்சனைக்கு எடுத்துச் செல்ல வேண்டும்' என்றார். 'நாங்களே தேங்காயை உடைக்க வேண்டுமென்றால், அர்ச்சனை டிக்கட் எதற்கு?' என்று கேட்க நினைத்தேன். என் எண்ண ஓட்டத்தை புரிந்து கொண்ட என் மனைவி, "கோயிலில் எதையாவது ஆரம்பிக்காதீர்கள்! வீட்டில் தான் கையசைப்பதில்லை, போய் தேங்காய்களை உடைத்துக் கொண்டு வாருங்கள்" என்று உத்தரவு பிறப்பித்தார். கோயில் ஆசாமி சிரித்தது போலத் தோன்றியது என் பிரமையாகவும் இருக்கக் கூடும்! 2 தேங்காய்கள் 4 ஹெமிஸ்பியர்கள் ஆயின! பெருமாள் சன்னதிக்குள் நுழைந்தோம்.
"எம்பிரான் எந்தை என்னுடை சுற்றம் எனக்கரசு என்னுடை வாணாள்" என்று திருமங்கையாழ்வாரை மனமுருக, பக்திப் பரவசத்துடன் பாட வைத்த எம்பெருமான் "சிக்க" திருவேங்கடமுடையானின் (ஸ்ரீதேவி பூதேவி நாச்சியாருடன்) "தொட்ட" திவ்ய தரிசனம் கிட்டியது! கண் குளிர சேவித்தோம். திருமலைப் பெருமாளின் மினியேச்சராக இருந்தார், சிக்க திருப்பதி நாயகன்! "ஜருகண்டி" என்று யாரும் பிடித்துத் தள்ளாததால், ஒரு 7-8 ஆழ்வார் பாசுரங்களை நிதானமாக சொல்ல முடிந்தது.

குன்றம் ஏந்தி குளிர் மழை காத்தவன்
அன்று ஞாலம் அளந்த பிரான் பரன்
சென்று சேர் திருவேங்கட மாமலை
ஒன்றுமே தொழ நம் வினை ஓயுமே!

செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே
நெடியானே வேங்கடவா நின் கோயிலின் வாசல்
அடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்தியங்கும்
படியாய்க் கிடந்துன் பவளவாய் காண்பேனே!

ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி
வழுவிலா அடிமை செய்ய வேண்டும் நாம்
தெழிகுரல் அருவித் திருவேங்கடத்து
எழில் கொள் சோதி எந்தை தந்தை தந்தைக்கே!

ஹோட்டலுக்கு மீள்பயணம் மேற்கொள்ள பஸ் நிறுத்தத்திற்கு வந்தோம். கூட்டமாக ஒரு பஸ் வந்தது. கண்டக்டர் கீழே இறங்கி, '2 மணி நேரத்திற்குப் பின் தான் அடுத்த ஒயிட்ஃபீல்ட் பஸ்' என்று காப்ரா பண்ணியவுடன், என் மனைவி மகள்களைக் கூட்டிக் கொண்டு சட்டென்று பஸ்சில் ஏறி விட்டார்! அம்போவென்று நின்றிருந்த என்னையும் பஸ்சுக்குள் திணித்து, கண்டக்டர் பின்னால் ஏறிக் கொண்டார்!

நல்ல வேளை, 2 நிறுத்தங்களுக்குப் பின், எனக்கும், என் மகள்களுக்கும் உட்கார இடம் கிடைத்து விட்டது. மனைவிக்குக் கிடைக்கவில்லை! சிக்க திருப்பதி பெருமாள் சங்கல்பம் அப்படி இருந்தால் நான் என்ன செய்ய முடியும் :-) பக்கத்தில் இருந்த கிராமத்து ஆசாமியிடம் "ஓஃபார்ம் ஸ்டாப்பிங்க் சொல்ப ஹேள்பிடி" என்று கூறி என் கூரிய கன்னட அறிவை பிரகடனப்படுத்திக் கொண்டேன்! இப்பயணத்தில் வெள்ளந்தியான, உதவும் குணம் கொண்ட கிராமத்து மனிதர்கள் பலரைக் கண்டதும் மனதுக்கு இதமாக இருந்தது.

அது வரை, தன் கன்னட மொழியறிவை பயன்படுத்தாத (நன்றாக கன்னடம் பேசக்கூடிய) என் மனைவி, கண்டக்டருடன் அளவளாவி, பஸ் எங்களை ஹோட்டல் வாசலிலேயே இறக்கி விடும்படி ஒரு ஏற்பாடு செய்து விட்டார்! இப்படியாக சிக்க திருப்பதி பயணம் இனிதே நிறைவடைந்தது!

எ.அ.பாலா

Sunday, January 03, 2010

553. பார்த்தசாரதி-ராப்பத்து உத்சவம்-படங்கள்

மார்கழி ராப்பத்து (10 நாட்கள்) உத்சவத்தின்போது தினம் (சுமார்) 100 பாசுரங்களாக நம்மாழ்வாரின் திருவாய்மொழி பெரும்பாலான பெருமாள் கோயில்களில் ஓதப்படுகிறது.

இன்று பார்த்தசாரதி கோயில் உத்சவ மூர்த்தி முத்தங்கி
சேவையில் வீதி உலா வந்தபோது எடுத்த புகைப்படங்கள்!

படங்களை கிளிக்கி பெரிதாக்கிப் பார்க்கவும்.

பெருமாள் பிராட்டிகளோடு:

வேதம் தமிழ் செய்த மாறன் (நம்மாழ்வார்)
பராங்குச நாயகியைப் போன்ற திருக்கோலத்தில்

Saturday, December 19, 2009

552. குட்டி ராட்சசியின் டோரா..ஆண்டாள்


தான் வரைந்ததை ஃபோட்டோ பிடித்து பிளாகில் போட வேண்டும் என்று சின்னவள் அடம் பிடித்ததன் விளைவாக, இம்மொக்கைப் பதிவு!  இதற்கெல்லாம் என்ன காசு பணமா செலவு செய்கிறோம் ;-)  கு.ரா வுக்கும் மகா சந்தோஷம், தானும் ஒரு விருந்தினர் இடுகை இட்டதில் :)


Saturday, October 31, 2009

551.சென்னையில் தொலைந்து போனவர்கள்!

அன்று காலையில் "டியாப்பம் டியாப்பம்" என்று கூவிக்கொண்டு சைக்கிளில் சென்றவரைப் பார்க்கையில், சில மலரும் நினைவுகள் தோன்றின. நமது இந்த அவசர, "வளர்ச்சி" அடைந்த வாழ்க்கையின் காரணமாக, எத்தனை மனிதர்கள் தொலைந்து போய் விட்டார்கள், இந்த மாநகரத்திலிருந்து! கிராமங்களில் அவர்கள் இன்றும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள்!

என் பள்ளி நாட்களில், திருவல்லிக்கேணியின் தெருக்களில் பலவகையான மனிதர்கள் உலா வந்தார்கள்! "உப்புத் தாத்தா"வை மறக்கவே முடியாது. ஒரு பெரிய சாக்குப்பை நிறைய கல் உப்பை கைவண்டியில் இட்டு, வாரம் ஒரு முறை எங்கள் தெருவில் "உப்பேய், உப்பேய்" என்று கூவிக்கூவி விற்பார். எல்லாரும் வாங்குவார்கள். ஒரு படி நாலணா என்று ஞாபகம். அப்போதெல்லாம் யாரும் "ஐயோடைஸ்ட் சால்ட்" உபயோகித்தது இல்லை!!

அது போலவே, திருவள்ளுர்/செங்கல்பட்டு அருகே இருந்த கிராமங்களிலிருந்து பருப்பு, புளி, குண்டு மிளகாய் போன்ற சாமான்களை எடுத்து வந்து சென்னையில் ரெகுலராக விற்று வந்தனர். பளபளவென்ற மூங்கில் கூடைகளில் கலப்படமில்லா சரக்கை, நியாயமான விலைக்கு விற்றனர். அரிசிக்காரர்கள் பெரும்பாலும் தெலுங்கர்களே.

ஆந்திரத்தில்(முக்கியமாய் நெல்லூர்) விளைந்த அரிசியை வீட்டுக்கே எடுத்து வந்து அளந்து போடுவர். படிக்கணக்கு தான், கிலோவெல்லாம் கிடையாது. படி 5-6 ரூபாய் தான்.

அரிசிக்காரருடன் ஒரு கூலியாள் மூட்டை அரிசியை முதுகில் தூக்கி வந்து, அத்தனை அரிசியையும் ரேழியில் கொட்டிவிட்டு, அளந்து போடும் அந்தக் காட்சி அலாதியான சுவாரசியம்! அரிசிக்காரர் படி எண்ணிக்கையை சத்தமாக தெலுங்கில் அறிவிக்க, கூலியாள் அரிசியை படியில் இட்டு எங்கள் அரிசி டின்னில் கொட்டுவார். அவர் நிலைமை தான் பரிதாபம், என் பாட்டி (அரிசியை படியில்) 'கூம்பாகப் போடு' என்பார், அரிசிக்காரரோ தெலுங்கில் "தட்டிப்போடு" என்று கட்டளையிடுவார் :)

காஞ்சிபுர வியாபாரி ஒருவர் பளபளக்கும் வெண்ணையை தகர டின்னிலும், நெய்யை ஹார்லிக்ஸ் பாட்டில்களிலும் வீட்டுக்கே எடுத்து வந்து விற்பனை செய்வார். பணத்தையும் தவணை முறையில் வாங்கிக் கொள்வார். போனஸாக சின்னப் பசங்க எங்களுக்கு கொஞ்சம் வெண்ணெய் கொடுத்து விட்டுத் தான் புறப்படுவார்! அதை சர்க்கரையைத் தொட்டுத் தின்போம்.

அழகான மண்பானையில் தயிர் எடுத்து வந்து விற்ற ஆயாவையும் மறக்க முடியாது. அது போல ருசியான, சற்று புளிப்பான தயிர் இன்று வரை கிடைக்கவில்லை!

"கோல மாவேய் கோல மாவேய்" என்று கோலம் போடும் மாவை வீதியில் விற்ற காலமும் மலையேறி விட்டது, இங்கொன்று அங்கொன்று என்று சிலர் விற்றாலும் கூட! அதற்கு மொக்குமாவு என்ற பெயரும் உண்டு.

இப்போது, அவரவர் தங்கள் ஃபிளாட் வாசலில் ஸ்டிக்கர் கோலத்தை நிரந்தரமாக ஒட்டி விட்டு, அதை தினமும் துடைத்து விடுகிறார்கள் :) சிலர், மொத்தையாக உள்ள ஒரு சாக்குக்கட்டியால் தாரேபூரே என்று ஒரு கோலம் போடுகிறார்கள்! என்ன கொடுமை பாருங்கள்! இதனால் தான், கோலம் போடும் போட்டியெல்லாம் வைத்து, அந்த பாரம்பரியக் கலையை இப்போது காப்பாற்ற வேண்டியுள்ளது :)

பால்காரர் வீட்டுக்கு வந்து பால் தருவதும் அரிதாகி விட்டது. எருமைப்பால், பசும்பால் எல்லாம் போய், ஆவின் பால், ஆரோக்கியா பால் வந்து பலகாலமாகி விட்டது! மிச்சம் மீதியுள்ள பால்காரர்கள் பாலை ஹோட்டலுக்கு விற்று வருகின்றனர்! தெருவில் அலையும் மாடுகள் ஆவின் பிளாஸ்டிக் கவர்களை சாப்பிடுகின்றன :)

ஊதுவத்தி, கற்பூரம் மற்றும் சின்னச்சின்ன அழகுச்சாதனங்களை விற்க வரும் பெண்களை, காவல்காரர் அடுக்குமாடி குடியிருப்புக்குள் போகவே விட மாட்டார்.

சூப்பர் மார்க்கெட் கலாச்சாரமும், அவசர, துட்டுக்கு அலையும் அவல வாழ்க்கையும் அவர்களையெல்லாம் துரத்தி விட்டது. மனிதரை மனிதர் நம்ப முடியாத ஒரு சூழலால், யாரையும் வீட்டுக்கு உள்ளே அனுமதிக்க பயமாயிருப்பதுவும் ஒரு காரணம் தான்.

நமது "use & throw" என்ற அமெரிக்கரிடமிருந்து கற்றுக் கொண்ட பழக்கத்தால், காணாமல் போனவர் சிலருண்டு.பழைய பாட்டில்களையும், இரும்புச் சமாச்சாரங்களையும், பாலிதின் பால் கவர்களையும் விலைக்குப் போட்டுக் கொண்டிருந்த காலம் போய், அவையெல்லாம் இப்போது நேராக குப்பைத்தொட்டிக்கு போய் விடுகின்றனர். இது சுற்றுப்புற சுகாதார சீரழிவுக்கு வழிவகுக்கிறது. முன்பெல்லாம், பழைய துணிகளை சேர்த்து வைத்து பாத்திரக்காரரிடம் போட்டு பாத்திரம்/பிளாஸ்டிக் சாமாங்கள் வாங்குவார்கள்.

பழைய துணிகள் + பணம் என்று cash & kind முறையில் நடந்த வியாபாரம் அது. பாத்திரக்காரர், பல குடித்தனங்கள் உள்ள ஒரு வீட்டில் 2-3 மணி நேரம் உட்கார்ந்து டீலை முடிப்பார்! அடுக்குமாடி குடியிருப்பு நிறைந்த கான்கிரீட் காடாகி விட்ட ஊரில் அவர் கண்ணில் தட்டுப்படுவதே அபூர்வமாகி விட்டது.

அது போலவே, "பிளாஸ்டிக் பக்கிட்டு ரிப்பேய்ர்" என்று கூவியபடி வந்து, ஊதி ஊதி கரியைப் பற்றவைத்து, வாய்/காது அறுந்த பிளாஸ்டிக் பக்கெட்டுகளை அழகாக ஒட்டித் தருபவர்களும் காணாமல் போய் விட்டார்கள்.

கத்தி, கத்திரி, அருவாள்மனை, கூர் தேய்ந்து விட்டால், கூலாக நாம் அவற்றைத் தூக்கிப்போட்டு விட்டு, புதிது வாங்கி விடுகிறோம். அதனால், காலால் மிதித்து சக்கரம் சுழற்றி சாணக்கல்லில் அவற்றைக் கூர் தீட்டித்தரும் சாணக்காரர்களும் வழக்கொழிந்து வருகிறார்கள்.

அந்தக்காலத்தில், அவர்கள் "சாணா பிடிக்கறதே சாணா" என்று கூவிக் கொண்டு வந்தவுடன் வீதிக்கு ஓடிச் செல்வோம். தீப்பொறி பறக்க சாணம் தீட்டுவதை சிறுவர்கள் சுற்றி நின்று வேடிக்கை பார்ப்பது வாடிக்கை. ஒரு கால் பெடலை மிதிக்க, இரண்டு கைகளாலும் கத்தியை வாகாக பிடித்து, வேகமாக சுழலும் சாணக்கல்லில் அதை லாவகமாக கூர் தீட்ட வேண்டும்!

இவர்களில் தப்பியவர்கள், செருப்பு தைக்கும் தொழிலாளிகளும், ரோட்டில் குப்பை பொறுக்குபவர்களும் தான்! ஏனோ செருப்பைத் தைத்து உபயோகிக்கும் வழக்கம் இன்னும் நம்மிடம் இருப்பதால், முன்னவர் சிலர் தெரு ஓரங்களில் இன்னும் பிழைப்பை ஓட்டிக் கொண்டிருக்கின்றனர்.

பின்னவர் நம்மை நம்பி இல்லை; சாலையில் இருக்கும் குப்பைத் தொட்டிகளையும், அவர் துரத்திச் செல்லும் குப்பை வண்டிகளையும் நம்பி இருப்பதால், அவர்களின் வண்டியும் நகரத்தில் ஒடிக் கொண்டிருக்கிறது!

சரி, இப்படித் தொலைந்து போனவர் வாழ்வில் ஏதாவது முன்னேற்றம் ஏற்பட்டு விட்டதா, அவர்கள் பிள்ளைகள் வேறு நல்ல வேலைக்குச் சென்று முன்னுக்கு வந்து விட்டார்களா என்றால், அதுவும் நல்ல அளவில் நடந்ததற்கான அறிகுறி எதுவும் இல்லை! Inequality is so rampant. இந்த இடுகையின் முடிவில் சுட்டப்பட்டிருக்கும் "உருப்படாதது" நாராயணனின் கட்டுரையை நீங்கள் கட்டாயம் வாசிக்க வேண்டும்!

நாம் காணும் பொருளாதார வளர்ச்சி என்பது அடித்தட்டு மக்களை சென்றடையவே இல்லை என்பது நிதர்சனம். ஏழைகளை ஏழைகளாக வைத்து அரசியல் நடத்தி, இந்திய ஜனநாயகம் தழைத்து வளர்ந்திருக்கிறது, கூடவே நக்ஸலிசமும் தான் !!!!

எ.அ.பாலா

picture courtesy:
1. Velachery Balu
2. DFID - UK Department for International Development
http://www.flickr.com/photos/balu/3303479445/
http://www.flickr.com/photos/dfid/3316075589/

Sunday, October 11, 2009

550. திரும்பிப் பார்த்த நதிகள், திகைத்து நின்ற ஆந்திரம்

நீண்ட நாட்களுக்குப் பிறகு கி.அ.அ.அனானியிடமிருந்து ஒரு மேட்டர் மெயிலில் வந்தது. சமீபத்திய நிகழ்வொன்றினால் தமிழ் வலைப்பதிவுலகு அல்லோலகல்லோலப்படும் நேரத்தில் 'இதென்ன கலாட்டா' என்று பிரித்து வாசித்தால், ஆச்சரியம். ஆந்திரா வெள்ளச் சேதம் பற்றி கி.அ.அ.அ எழுதியிருப்பது கண்டு அதிர்ச்சி :-) நல்ல அலசல் என்று தோன்றியதால், அதை உடனே பதிப்பிக்கிறேன். நன்றி.

எ.அ.பாலா
*********************************************






இயற்கையின் சீற்றத்தை மனிதன் ஓரளவிற்கு மேல் தடை போட்டு விட முடியாதுதான்.ஆனால் வரும் செய்திகளைப் பார்த்தால் பேராசையினால் நாமே இந்த இயற்கையின் சீற்றங்களுக்கு துணை போய்,தூண்டுகோலாய் இருந்து அழிவை மேலும் பேரழிவாக்கிக் கொள்கிறோம் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.

குறிப்பாக ஆந்திராவில் இந்த மாதம் தொடக்கத்தில் ஏற்பட்ட  வெள்ள சேதத்தினால் ஆந்திர கர்நாடக மாநிலங்களில் 250 பேருக்கு மேல் பலி ,15 லட்சம் பேர் வீடிழப்பு மற்றும்15000 கோடி அளவிலான பொருட்சேதம் முதலியவற்றிற்குக் காரணம், மழை மற்றும் இயற்கையின் சீற்றம் என்பதை விட  அரசியல்வாதிகளின் பேராசையும் ஆட்சியாளர்களின் அசட்டையும் கவனக் குறைவும் என்று வரும் செய்திகள் நம்மை திடுக்கிட வைக்கின்றன.

அதிக மழை மற்றும் கட்டுக்கடங்காமல் பாயும் நீரினால், நதிகள் கரைகளை உடைத்துக் கொண்டு வெள்ளப் பெருக்கெடுத்து சேதம் விளைவிப்பதை கேல்விப்பட்டிருக்கிரோம். ஆனால் முதன் முறையாக நதிகளின் பாயும் நீர் , நீரோட்டத்திற்கு எதிராக பின்னோக்கிப் பாய்ந்து  வெள்ள சேதத்திற்கு ஒரு முக்கிய காரணமாக அமைந்தது என்று சொல்லி நம்மை கிடு கிடுக்க வைக்கிறார் ஆந்திர வேளாண்மைத்துறை உயர் அதிகாரி ஒருவர்.


இது ஆரம்பித்ததது, கர்னாடகாவின் கிருஷ்ணா மற்றும் துங்கபத்ரா நதிகளின் மழை பிடிப்புப் பகுதிகளில் கன மழை பெய்ய ஆரம்பித்ததும்தான்.இந்த இரண்டு நதிகளும் கர்நாடக மாநிலத்தில் தொடங்கி ஆந்திராவில் பாய்கின்றன.  ஆந்திரமும் கர்நாடகமும் நதிகள் மற்றும் நீர் நிலைகளைப் பொருத்த வரை மிக நெருங்கிய தொடர்புடையவை,கர்நாடகாவில் கனமழை எனில் ஆந்திராவில் வெள்ளம் வரும் எனும் அளவிற்கு .எதிர்பாராத கன மழைக்கு ( வழக்கம் போல் ) எந்த முன்னேற்பாடுடனும் இல்லாத கர்நாடக அரசு கிருஷ்ணா நதியில் ஆல்மாட்டி மற்றும் நாராயண்பூர் அணைகளிலிருந்து நீரைத் திறந்து விட ஆரம்பித்தது.

ஒரே நாளில் கிட்டத்தட்ட 8 லட்சம் கியூசெக் நீரை வெளியேற்றியது. இப்படி அதிரடியாக வெளியேற்றப்பட்ட உபரி நீரும் தொடர் கனமழையும் வட கர்நாடகத்தின் பிஜாபூர்,பகல்கோட் மற்றும் பெல்லாரி மாவட்டங்களை வெள்ளக் காடாக்கியது.அதோடு நில்லாமல் உபரி வெள்ளம் ஆந்திராவினுள்ளும் புகுந்தது. ஆனால் "இந்த கட்டுக்கடங்காத வெள்ளத்திற்கு முக்கிய காரணம் மழைக்கு முன் கர்நாடகா அல்மாட்டி அணையை கழுத்து வரை முட்ட முட்ட நீரை நிரப்பி வைத்திருந்ததுதான் .அதனால்தான் மழை அதிகரித்த போது அணையை ஒரு சேரத் திறந்து உபரி நீர வெளியேற்றுவதைத் தவிர வேறு வழியில்லாமல் போனது" என்கிறர்கள் நிபுணர்கள். ஆனால் " மஹாராஷ்டிரத்திலும் பெய்த கனமழைதான் இப்படி உடனடி அணை திறப்பிற்கு வித்திட்டு விட்டது, இல்லையேல் அணைகளே உடைந்து விடக் கூடிய பேரபாயத்திலிருந்து தப்பிக்கவே இப்படி திறந்து விட்டோம் " என்று சப்பைக் கட்டு கட்டுகிறது கர்நாடக அரசு.

உண்மை எதுவாக இருந்தாலும் இந்த உபரி நீரினால் சீறிப் பாய்ந்த கிருஷ்ணா நதி ஆந்திராவில் ஸ்ரீசைலத்தை ( ஆந்திராவில் கிருஷ்ணா நதிக்குக் குறுக்கே அணை கொண்ட முதல் நகரம் ) அடைந்த போது தான் பேரழிவு காத்திருந்தது.பொதுவாக இப்படிப் பட்ட அதிக மழை, வெள்ள காலங்களில்  அதற்கேற்றவாறு அணைகளில் நீர் தேக்கத்தை அமைத்துக் கொள்ள மத்திய நீர் ஆணையம் நதிகளில் வெள்ள நீர்வரத்து மற்றும் அளவுகள் குறித்து அறிக்கை வெளியிடும்,. ஆனால் இதைக் கண்டு கொள்ளாத ஸ்ரீசைலம் அணை நிர்வாகம் அணையிலிருந்து நீரை வெளியேற்றாவே இல்லை.இதில் கொடுமை என்னவென்றால் இப்படி முதலிலேயே நீரை வெளியேற்றியிருந்தாலும் அது வீணாகியிருக்காது.அடுத்ததாக இருந்த வெள்ளத்திற்கு முன்  பாதி கூட நிரம்பாத நிலையில் இருந்த நாகார்ஜுனசாகர் அணையில் சென்று தேங்கியிருக்கும் .

பிறகு ஏன் ஸ்ரீசைலம் அணையைத் திறந்து விட இத்தனை காலதாமதம்? இதற்கு மற்றெல்லாவற்றையும் விட முழு முதல் காரணம் ஆந்திராவின் பாழாய்ப்போன அரசியல்தான் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். ஆந்திராவின் முந்தைய இரண்டு முதலமைச்சர்களான மறைந்த ராஜசேகர ரெட்டி மற்றும் சந்திரபாபு நாயுடுவும் ஆந்திராவின் ராயலசீமா பகுதியைச் சேர்ந்தவர்கள்.கிருஷ்ணா நதியின் அருகில் இல்லாத இந்த ராயலசீமா பகுதிக்கு கிருஷ்ணா நதி நீரைக் கொண்டு செல்லவேண்டும் என்ற இவர்களது ஆசைதான்  ஸ்ரீசைலம் அணையில் ஏற்கனவே நீர் ஆணையத்தால் பரிந்துரை செய்யப்பட்டதற்க்கு அதிகமாக நீரைத் தேக்கச் சொல்லும் அரசாணையை வெளியிட வைத்தது என்கிறார்கள். மேலும் குறிப்பாக ராஜசேகர ரெட்டியின் பேராசைக்குக் காரணம்  ராயலசீமா பகுதிக்கு குடிநீர் என்பதற்கும் மேலாக தன் மகன் ஜகன் மோகன் ரெட்டி பினாமி பங்குதாரராக இருக்கும் ப்ராமணி உருக்காலைக்கு தண்ணீர் தரவே இந்த ஏற்பாட்டை செய்தார் என்றும் சொல்கிரார்கள்.( இது ஆந்திர சட்டசபையிலும் பெரும் அமளியை முன்னர் கிளப்பியதை பலரும் அறிந்திருக்கலாம்)

இப்படி அளவுக்கதிகமாக சேமிக்கப் பட்ட நீரால் தளும்பிக் கொண்டிருந்த ஸ்ரீசைலம் அணையில் , வெள்ளப் பெருக்குடன் மோதிய கிருஷ்ணாநதி மேலும் முன் செல்ல முடியாமல் மோதிய வேகத்தில் பின்னோக்கிப் பாய ஆரம்பித்தது.முதலில் 150 கி.மி தள்ளியிருந்த கர்னூலை தாக்கிச் சூழ்ந்தது.கர்னூலில் அருகேதான் கிருஷ்ணா நதியும் துங்கபத்ரா நதியும் சங்கமிக்கின்றன.இப்படி முன்னேர முடியாமல் பின்னடைந்த கிருஷ்ணாவின் வேகத்தைத் தங்காமல் ஏற்கனவே வெள்ளப் பெருக்குடன் ஓடிய துங்கபத்திரையும் முன்னே பாய முடியாமல் தத்தளித்தது.

விளைவு , கிருஷ்ணா நதி கர்னூலை மூழ்கடித்தது. நகரம் முழுவதும் 30 அடி உயரத்திற்கு தண்ணீர் சூழ்ந்து மூன்றடுக்குக் கட்டடங்களைக் கூட விட்டு வைக்காமல் மூழ்கடித்தது. அத்தோடு நிற்கவில்லை அவலம்..முன்னேர முடியாத துங்கபத்திரை பின்னோக்கிப் பாய்ந்து கரையிலிருந்த கிராம, நகரங்களை கபளீகரம் செய்ய ஆரம்பித்தது. அதில் முக்கிய நகரம் ராகவேந்திரர் முக்தி பெற்ற திருத்தலமான மந்திராலயம்.இந்த ஊரில் அமைந்த ராகவேந்திரர் கோவிலின் மடாதிபதியை மூன்றாம் மாடியிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் வெளியேற்றுமளாவு வெள்ளம் சூழ்ந்ததை செய்திகளில் பார்த்திருப்பீர்கள்.அதனோடு நில்லாமல் கர்நாடகாவில் வளமான ராய்சூர் பகுதியையும் முழுமையாக மூழ்கடித்து நாசப் படுத்தியது பின்னோக்கி நகர்ந்த துங்கபத்ரா நதி.

ஆந்திராவின் தற்போதைய முதல்வர் ரோசையா,  " அணைகளைத் திறந்து விட்டு, பின் மழை போதிய அளவு பெய்யாமல் அணை நிரம்பவில்லை எனில் அதற்கும் எங்களைத்தான் குறை சொல்வார்கள் " என்று சொல்லி அணைகளில் அதிக நீர் சேமித்ததையும், சரியான நேரத்தில் திறக்காததையும் ஞாயப்படுத்துகிறார். ஆனால் " மழை சீராக 15 முதல் 20 செ.மி அனைத்துப் பகுதிகளிலும் பெய்ததால் ,முதல்வர்  ரோசையா சொல்லும் நிலை கண்டிப்பாக வந்திருக்க வாய்ப்பே இல்லை,  "என்கின்றார்கள் நிபுணர்கள்.

வேறு வழியில்லாமல்,  ஸ்ரீசைலம் அணை திறந்து விடப்பட்ட போது ( இதில் நீண்ட நாள் திறக்காததால் ஒழுங்காக பராமரிக்கப் படாத சில மதகுகள் சரியான நேரத்தில் திறக்காமல் காலை வாரி விட்டது உபரித் தகவல்- கண்டிப்பாக இந்த மதகுகளைப் பராமரித்ததாக கணக்குக் காட்டி சில பல லட்சங்களை சில அரசியல் வாதிகளும் , அதிகாரிகளும் விழுங்கியிருப்பார்கள் என்பதில் சந்தேகமே இல்லை!!!)

ஒரு வழியாக மதகுகள் திறக்கப் பட்டதும் ,வெள்ளம் பெருக்கெடுத்த கிருஷ்ணா நதி குண்டூர் மற்றும் விஜயவாடாவை அடைந்த போது நேராகப் போய் கடலில் கலக்காமல் , பக்கக்கரைகளை உடைத்துக் கொண்டு ஆயிரக் கணக்கான விளைநிலங்களை மூழ்கடித்து அங்கும் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது.இதற்குக் காரணம், விவசாயிகள் தங்கள் நிலங்களுக்கு நீர் பாய்ச்ச நீர் எடுப்பதற்காக நதியிலிருந்து நேரடியாக பைப்புகளப் பதிக்கக் கரைகளைத் தோண்டி பலகீனமாக்கி விட்டதுதான் என்கின்றனர் விவரமறிந்தவர்கள்-தடுக்க வேண்டிய அதிகாரிகள் கையைக் கட்டிக் கொண்டு காசு பார்த்ததின் விளைவுதான் இது .



அடுத்ததாக கிருஷ்ணா நதி வங்கக் கடலில் கலக்கும் இடத்திற்கு அருகில் ரேப்பள்ளி என்ற இடத்தில் சில சமூக விரோதிகள் தங்கள் இடங்களுக்குத் தண்ணீர் புகுவதைத் தடுக்க கரைகளை உடைத்ததால் அங்கும் வெள்ளக்காடு என்பது அடுத்த சோகம்.இதை அரசு இப்போது தீவிரமாக விசாரித்துக் கொண்டிருக்கிறது!!!!.

இப்படி ஒட்டு மொத்த அசிரத்தையாலும், அசட்டையாலும் ,பேராசையலும் தொடர்ந்து ஏற்பட்டுக் கொண்டிருக்கும் இப்படிப்பட்ட பேரிழப்புகளை தேசிய சோகம் என்று சொல்வதை விட தேசிய அவமானம் என்றே சொல்லத் தோன்றுகிறது.

Tail piece :சமீபத்தில் ஆந்திர மாநிலத்தில் பேரழிவை ஏற்படுத்திய மழை தொடங்கிய போது அதே பகுதியில் மழை வருவதற்காக ஆந்திர அரசு நிறுவனமொன்று "க்ளவுட் சீடிங்" என்று சொல்லக் கூடிய மழை விளைவிக்கும் காரியத்தைச் ( இதற்கும் , பெய்த மழைக்கும் தொடர்பில்லை என்றாலும்) செய்து கொண்டிருந்தது என்பது நல்ல நகை முரண்.

(படித்த செய்திகளிலிருந்தும் (குறிப்பாக Times of India) மற்றும் விசாரித்து அறிந்த செய்திகளிலிருந்தும் தொகுக்கப்பட்டது)

கி.அ.அ.அனானி

Sunday, September 06, 2009

549. டகிள்பாட்சா "பழம்பெரும்" கவிதைகள் - விருந்தினர் இடுகை

டகிள் பாட்சாவின் அறிமுகம் சமீபத்தில் டிவிட்டர் மூலம் கிட்டியது. சுவாரசியமான மனிதர். நகைச்சுவை உணர்வு மிக்கவர். அந்தக்காலத்து பத்திரிகையாளர். இப்போது கணினித் துறையில் பணி புரிகிறார். சரளமான தமிழ். தமிழ் வலைப்பதிவுலகில் டோண்டு ராகவன் போல ஒரு பெரிய ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கிறேன். பதிவெழுத நேரம் கண்டுபிடிப்பது அவர் சாமர்த்தியம் :)


அவர் 80களில் எழுதிய 4 (பழைய வாசனை அடிக்கும்!) கவிதைகளை தன் ஞாபகத்திலிருந்தே எழுதி எனக்கு அனுப்பினார்.  வாசிக்கையில், இக்காலச் சூழலில் அக்கவிதைகள் "வித்தியாசமாக"த் தோன்றின! வாசிக்கும் இளைஞர்களுக்கு, இவை சிரிப்பை வரவழைக்கலாம்! ஆனால், 25 வருடங்கள் முன்பு வந்த ஆ.விகடனையும், குமுதத்தையும், சாவியையும், இதயம் பேசுகிறதையும் ஞாபகப்படுத்தி, எனக்கு நாஸ்டால்ஜியாவை வரவழைத்த கவிதைகள் இவை :)


டகிள் GCTயில் Engineering படித்துக்கொண்டிருந்த போது (நான் படித்துக் கொண்டிருந்தபோது தான், டகிள் எனக்கு ஒரு வருடம் ஜூனியர், காலேஜில் மட்டும்!) ஒரு மாணவி ஏகப்பட்ட புலம்பலாய் ஆண் வர்க்கத்தையே தாக்கி காலேஜ் தமிழ் மன்ற notice board-ல் 'இதய சோகம்' என்று ஒரு கவிதை எழுதியிருந்தாள். 'ஆண்கள் மோசக்காரர்கள், கயவர்கள், காதலித்து ஏமாற்றி நெஞ்சில் மிதித்துவிட்டு செல்பவர்கள்' என்கிற ரீதியில் போனது கவிதை. பெண்களிடம் பெரிய வரவேற்பு. நம்ம டகிள் ஒரு பதில் கவிதை எழுதி தமிழ் மன்றத் தலைவரிடம் கொடுத்தார். அந்த professorம் அதை படித்து ரசித்து Notice Boardல் அதை publish செய்தார். அந்தக் காலத்தில் மாணவர்களும் மற்ற professorகளும் மிகக் கொண்டாடிய அந்த கவிதை கீழே:


அந்த "இதய சோகம்" எழுதிய பெண் கவிஞர், இப்போது பெரிய லெவலில் கலக்கிக் கொண்டிருக்கிறார், அவர் யார் என்பது இடுகையின் முடிவில் !!

டகிள் கவிதை 1 - இதய சோகத்திற்கு ஆறுதல்

காதலில் தோல்வியுற்று
கலங்கியே நிற்கும் பெண்ணே!
காதலென்பெதுவென் தோழி?
பூதமோ? பேயோ? இல்லை;
'சூ'வென விரட்டின் ஓடும்
'வா'வென அழைக்கின் வாலை
குழைக்கின்ற நாய்தான் காதல்!
காளையர் கயவர்தானா?
கண்டிப்பாய் இல்லை! இல்லை!
கன்னியருடனே நின்றால்
காமுகன் என்றா அர்த்தம்?
கண்டிப்பாய் இல்லை! இல்லை!
ஆண்மகன் ஒருவன் வந்து
அன்புடன் பேசும்போது
அதன் பெயர் காதல்தானா?
பேதைகள் என்றே உம்மை
சொன்னதும் சரிதான் போலும்!
ஆணெனப் பெண்னெனப் பார்த்தால்
காதல்தான் விளையும் பெண்ணே!
லட்சுமி என்பது ஆத்மா
லக்ஷ்மணன் என்பதும் ஆத்மா
கண்ணகி என்பதும் ஆத்மா
கருப்பனும் ஆத்மாதானே!
இப்படிப் பார்க்கும்போது
காதலா மனதில் தோன்றும்;
கருணையும் அன்புமே மிஞ்சும்!
இந்தியா வளரும் நாடு
இதிலென்ன காதல் இப்போ?
வளர்ச்சியை அழிக்கும் காதல்
வாழ்க்கையை கனவில் மூழ்க்கும்;
தோழமை வலிமைக் குன்று!
நட்புதான் என்றும் நன்று;
காதலைக் களைந்தே வாழ்வில்
தோழமை புரிவோம் வாரீர்

டகிள் கவிதை 2 - அறிவுச்சரிவு

கண்ட கண்ட
புத்தகங்களைப் படி!
ஆறு வித்யாசங்கள் பார்;
வழவழவென்றிருப்பது
முட்டையா! மொட்டையா?
அறிவுப் போட்டியில்
ஆர்வமாய் பங்கு கொள்;
ஆயிரம் ரூபாய்
கிடைத்தாலும் கிடைக்கும்!
"இலக்கியமா?" தூக்கி
குப்பையில் போடு!
"எந்த நடிகைக்கு
கன்னத்தில் குழி விழும்?
அடடா!
இதுதாம்பா இண்ட்ரஸ்டிங்....
"இந்தியாவில் தொழிற் புரட்சி!"
தலைப்பைப் பார்த்ததுமே
கொட்டாவி விட்டு
பக்கத்தைத் திருப்பி
சிட்டி எண்டர்டைன்மெண்டை
தேடு!
நல்லதாய்
மசாலா படம் வந்திருந்தால்
நாலு மணி நேரம்
வெய்யிலில் நின்று
வியர்வை வழிய
டிக்கட் வாங்கி
விஸிலடித்தபடி பார்த்து விட்டு
வெளியே வந்து புகை விடலாம்!
வருங்கால இந்தியா
நம் கைகளில்தானாம்
ஜாக்கிரதை!
கைகளை இறுக மூடு!
இந்தியா மீது
வெளிச்சம் பட்டுத்
தொலைத்து விடப்போகிறது!

டகிள் கவிதை 3 - பார்ட் டைம் B.E

நெஞ்சிலே துணிவிருந்தால்
எஞ்சினீரிங் படிக்கப் போ!
முடிந்தால் Part Timeல் படி!
அலுப்பூட்டும் office வேலைகள் நடுவே
கண்டதை படித்து
மண்டையை குழப்பலாம்!
இரவெல்லாம் கண்விழித்துப்
படித்து
தூக்கத்தில் பரீட்சை எழுதி
ரிஸல்ட் வரும் வரைக்கும்
துக்கத்தில் மிதக்கலாம்!
பின்னர்
போனதை நினைத்து கொஞ்சம்
மெலிதாய் அழுது விட்டு
தொலை தூரத்தில் தெரிவதாய்
நாம்
கற்பனை செய்து கொண்ட
வளமான எதிர்காலம்
அருகினில் வரும் வரை
அவஸ்தைப் படலாம்!
நெஞ்சத்து தெம்பனைத்தும்
தீர்ந்த பின்னர்
டிகிரி வாங்கின கையோடு
பென்ஷனையும் வாங்கலாம்
நெஞ்சிலே துணிவிருந்தால்
Part Time B.E. படிக்கப் போ!

டகிள் கவிதை 4 - கனவு ஜீவிதம்

வசிப்பதற்கு பங்களா
நாலு கார்
ஏஸி ரூம்
சொன்னதை முடித்திட
சுற்றிலும் வேலையாள்
பவுடர் ஸ்நோ
பான் கேக்
பகட்டாய் கட்டிட
Only Vimal
கழுத்திலே நாளெலாம்
பத்து பவுன் சங்கிலி
வைரத்தில் அட்டிகை
விடியு மட்டும்
வீடியோவில் படம்
அன்புடன் கணவன்.....
ஆசைகள் எத்தனை ??
ஏண்டி சனியனே!
நான் பெத்த குரங்கே!
தலையை அசைக்காதே!
உன் தகப்பன் வருவதற்குள்
பின்னி முடிக்கனும்
உன்
கூந்தலை மட்டுமல்ல
என்
கற்பனைகளையும்தான்..



டகிள் எழுதிய (இடுகையின் ஆரம்பத்தில் குறிப்பிட்ட) "இதய சோகத்திற்கு ஆறுதல்" கவிதைக்கு இன்ஸ்பிரேஷனாக இருந்த அந்த பெண் கவியின் பெயர் டகிளுக்கு ஞாபகமில்லை!


சமீபத்தில் டகிளிடம் நான் தொலைபேசிக் கொண்டிருந்தபோது, "அந்த பெண் கவி யார் தெரியுமா? திரைத்துறையில் பிரகாசிக்கும் நம்ம கவிஞர் தாமரை தான். அவர் என்னுடைய பேட்ச் தான், GCTயில்"". என்றேன். "டகிளுக்கே டகிளா?" என்றார் :) "இல்லை, அது தாமரை தான். அப்போதே நிறைய கவிதைகள்/கட்டுரைகள் எழுதுவார்" என்றேன்.


தாமரை அப்போதே பெண்ணியவாதக் கருத்துகளை தைரியமாகப் பேசுவார். மெக்கானிகல் Engg. வகுப்பில் அவர் ஒருவர் தான் பெண்!


புதிதாக தமிழில் வலை பதிய வந்துள்ள டகிள்பாட்சாவை வாசகர்/நண்பர் சார்பில் வரவேற்கிறேன். அவர் நிறைய எழுத வாழ்த்துங்கள், உற்சாகப்படுத்துங்கள்!


எ.அ.பாலா

Saturday, August 29, 2009

548. பார்ப்பனர் அல்லாத அர்ச்சகர்கள்

இரண்டாண்டுகளுக்கு முன், தமிழக அரசாணையின் பேரில், தகுதி பெற்ற அனைத்து சமூகத்தினரும் அரசு சார்ந்த கோயில்களில் அர்ச்சகராகலாம் என்று முடிவாகி, அதன் தொடர்ச்சியாக 207 மாணவர்கள் ஓராண்டு கால 'இளைய அர்ச்சகர் சான்றிதழ்' படிப்பை (Junior Archaka Certificate Course) பயின்று நிறைவு செய்து ஓராண்டு ஆகியும், படிப்பு முடித்ததற்கான அத்தாட்சி பெறக்கூட வழியின்றி தவிக்கின்றனர்! இதற்குக் காரணம், பார்ப்பனர் அல்லாதோர் அர்ச்சகராகக் கூடாது என்று போடப்பட்ட வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பது தான். இவ்வழக்கைத் தொடர்ந்திருப்பது, ஆதிசைவ சிவாச்சாரியார் நல சங்கமும், தென்னிந்திய திருக்கோயில் அர்ச்சகர்கள் பரிபாலன சபையும் என்பது குறிப்பிடத்தக்கது!

பின்னணி: 38 ஆண்டுகளுக்கு முன்பே, 1971-இல் தமிழ்நாடு இந்து மதச் சட்டப்பிரிவொன்றில் மாற்றம் வாயிலாக வம்சாவழியில் அர்ச்சகர் ஆவது தடை செய்யப்பட்டும், இப்பிரச்சினை இன்று வரை ஓய்ந்தபாடில்லை !!!!

குருக்கள் / பூசாரித் தொழிலில் மரியாதை கிடைப்பது உண்மையானாலும் (பிரபல கோயில்கள் அர்ச்சகர் தவிர்த்து!) அதனால் காசுக்கு வழியில்லை என்பது தான் யதார்த்தம். என்றாலும், இது அமலுக்கு வரும் பட்சத்தில், இதை ஒரு பெரும் சமூக அளவிலான நல்லதொரு மாற்றமாக வரவேற்க வேண்டும். சாதி சார்ந்த சீரழிவுகள் குறைவதற்கு ஒரு தொடக்கமாகவும், சமூகப் பார்வை இன்னும் தெளிவு பெறுவதற்கு ஒரு முன்னோடியாகவும் இது நிச்சயம் அமையும்.

செய்தி: செந்தில்குமார் எனும் தலித் மாணவர், பிருந்தாரண்ய ஷேத்திரம் என்று போற்றப்படும் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் உள்ள வைணவ அர்ச்சக பயிற்சி மையத்தில் பயின்று, தனது ஒரு வருட ஜூனியர் அர்ச்சகர் சான்றிதழ் படிப்பை முடித்துள்ளார். ஆனால், கோயில் அர்ச்சகர் எதிர்ப்பு காரணமாக, கர்ப்பகிருகத்தில் (Sanctum Sanctorum) பிராக்டிகல் பயிற்சி பெற அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது!! அதனால அவரும் இன்னும் சிலரும் "மாடல்" ஒன்றை உருவாக்கி, பிராக்டிகல் பயிற்சியை முடித்துள்ளனர்! அது போலவே, கோயிலுக்குள் நாலாயிர திவ்யப் பிரபந்தம் ஓதவும் அவர்கள் அனுமதிக்கப்படவில்லை.

இதில் வேடிக்கை என்னவென்றால், பிரபந்தப் பாசுரங்கள் அருளிய பன்னிரு ஆழ்வார்களில் பெரும்பாலானவர், பார்ப்பனர் அல்லாதவர்.
எ.கா: ஆழ்வார்களில் தலையான நம்மாழ்வார் வேளாள குலத்தவர், திருமழிசையாழ்வாரும், அமலனாதிபிரான எனும் அற்புதத்தை அருளிய திருப்பாணாழ்வாரும் தாழ்த்தப்பட்ட குலத்தினர், கலியன் எனும் திருமங்கையாழ்வாரும், குலசேகர ஆழ்வாரும் சத்திரிய வம்சத்தினர்.

செந்தில் போலவே, பச்சையப்பன் என்ற பிற்படுத்தப்பட்டவரும், திருவண்ணாமலையில் எந்தக் கோயிலிலும் தகுதியிருந்தும் அர்ச்சகர் ஆக முடியாத சூழலில், தான் முதலில் செய்து வந்த விவசாயத் தொழிலுக்கே சென்று விட்டார். இந்த ஜூனியர் அர்ச்சகர் சான்றிதழ் படிப்பை முடித்த 207 பேரில் 3 பார்ப்பனர்களுக்கு மட்டுமே அர்ச்சகர் வேலை கிடைத்துள்ளதாக மற்ற மாணவர்கள் கூறுகின்றனர்...

எ.அ.பாலா

நன்றி: டெக்கான் குரோனிகள் நாளேடு

547. ராஜாவின் இசை மேதைமை

இளையராஜாவின் இசை குறித்த கருத்துச்செறிவு மிக்க நுணுக்கமான அலசலை, பின்னூட்டங்களாக தமிழ் இணையத்தில் வாசிக்க நேர்ந்தது. அவை பலரும் வாசிக்க வேண்டியவை, சேமிக்கத்தக்கவை என்று கருதுவதால், அவ்விரு பின்னூட்டங்களை இடுகையாக என் வலைப்பதிவில் இடுகிறேன்! பதிவுலக நண்பர்களிடையே தனிமனித விருப்பு/வெறுப்பு சார்ந்த சச்சரவாக, விவாதம் மாறி விடாமல் இருக்க, அவ்விரு பின்னூட்டக் கருத்துகளை சற்றே மட்டுறுத்தி பதிய வேண்டியது அவசியமாகிறது! இனி வாசியுங்கள்....

இவை ரோசா வசந்த்தின் கருத்துகள்:

ரோஸாவசந்த் 10:19 am on August 28, 2009


http://rozavasanth.blogspot.com/2006/05/1.html

http://rozavasanth.blogspot.com/2006/06/2.html


இந்தி பாடல்களை கேட்டுகொண்டிருந்த தமிழர்களை தமிழ் பாடல்களை ராஜா கேட்க வைத்தார் என்று சொல்லும் வாதத்தை சில ஆதாரத்துடன் வன்மையாக மறுத்திருந்தேன். இந்தியில் இருந்து ராஜா தமிழை காப்பாற்றினார் என்பது போல எம்.எஸ்.வி போன்ற மேதைகளை கேவலப்படுத்தும் வாதம் வேறு கிடையாது. ராஜா என்று ஒருவர் பிறக்காமல் இருந்தால் கூட இந்திப்பாடல் ஆதிக்கத்திலிருந்து தமிழ் நிச்சயாமாய் தப்பியிருக்கும்,

அடுத்து ஹிந்திக்காரர்கள் எல்லாம் இப்போது தமிழ் பாட்டு கேட்டு கொண்டிருக்கிறார்களா? அப்படியே இருந்தாலும் இதெல்லாம் எனக்கு ஒரு மேட்டரே இல்லை. அடிப்படையில் அடிமை மனநிலையை கொண்டிருப்பவர்களுக்குதான் இந்திக்காரர்கள் இசையை அங்கீகரிப்பது என்பது ஒரு பொருட்டாக இருக்க முடியும். ராஜா தமிழ் திரை உலகில் ஒரு பொற்காலத்தை உருவாக்கியிருந்த போது, இந்தியில் பப்பிலஹரி கொடிகட்டி பறந்தார். ..... அளவுகோல் படி பப்பிலஹரி ஒரு மேதையாக தெரியலாம்.

நான் கட்டாயப்படுத்தி .. கருத்தை மாற்ற முடியாது. சுமார் 40 ஆண்டுகளாக மிக வளமாக இருந்த ஹிந்தி திரை இசை, 70களிலேயே அலுப்பூட்டும் மோனொடோனஸ் இசையாக மாறி, 80 களில் குப்பையாகி, 80களின் இறுதியில் கழிவாக மாறியிருந்தது. இவைகளை உதாரணத்துடன் விளக்க முடியும். அந்த சூழலில் கூட ராஜாவால் இந்தியில் தடம் பதிக்க முடியவில்லை என்றால் அந்த வெகுரசனை கேவலமானதா அல்லது அது ராஜவின் குறையா?

நான் ரஹ்மான், ராஜா உட்பட யாரையும் ஒப்பிடுவதில்லை. ராஜாவின் இசை மட்டும் போதுமான ஒன்றாக எனக்கும் சமூகத்திற்கும் இல்லை என்றுதான் நினைக்கிறேன். ஆனால் ஜீனியஸ் என்ற வார்த்தைக்குள் ராஜாவை மட்டுமே என்னால் அடக்க முடியும். ஓரளவு இசை அறிவு கொண்டு மற்றவர்கள் அளித்த இசை பரிணமித்ததை பாதையை ஒரு சட்டகத்தில் புரிந்து கொள்ள முடியும். ரோஜா, ஜெண்டில்மேன் துவங்கி ̀மஸக்கலி ‘பாடல்வரை அது எவ்வாறு ஏற்கனவே இருந்த இசைகளை மிக திறமையான முறையில், நீண்ட உழைப்பிற்கு பின் manipulate செய்து உருவானது என்று புரிந்து கொள்ளமுடிகிறது. ராஜா அளித்தவைகள் இத்தகைய எந்த புரிதலுக்கும் அப்பாற்பட்டு இருப்பதாலேயே அவரை மட்டுமே நானும் பலரும் ஜீனியஸ் என்கிறோம். இதில் மாறுபடுவர்களுடன் சண்டை போடுவதில் எந்த அர்த்தமும் இல்லை - ஓரமாக இதை சொல்லிவிட்டு போவதை தவிர.

ராஜா செய்த அனைத்தும் அதிசயம்! ̀செந்தூரப்பூவே’யில் துவங்கி (நான் அன்னக்கிளியில் ராஜாவை துவக்க மாட்டேன்) ̀தென்றல் வந்து தீண்டும் போது’ வரை அனைத்தும் நமது புரிதல்களுக்கு அப்பாற்பட்டது. இதுவரை நாம் அறிந்த genreக்களில் அடங்காமல், அவைகளின் fusion என்றும் வகைப்படுத்த முடியாத ஒன்று. ராஜாவின் காலத்தில் இந்த அதிசயத்தை உணர்ந்தததாக சொல்ல முடியாது. அப்போது அது ஒரு ஹிட் இசை என்ற அளவில் மட்டுமே இருந்தது. 20 ஆண்டுகள் கழித்தே இதன் பல அறியாத நுட்பங்களை பேசிக்கொண்டிருக்கிறோம். இன்னமும் பிடிபட்டதாக சொல்ல முடியவில்லை. அதிசயிக்க மட்டுமே முடிகிறது.

ராஜாவையும் ரஹ்மானையும் ஒப்பிடுவது என்பது மிகவும் அபத்தம். நான் ஒரு அறிவுத்துறையில் ஆராய்ச்சி செய்யவேண்டும் என்றால் இதற்கு முன்னால் பங்களித்தவர்களை தாண்டித்தான் ஏதாவது செய்யவேண்டும். அவ்வாறு தாண்டி செய்துவிட்டதால் ஐன்ஸ்டீனை விட நான் பெரிய ஆளாகிவிட முடியாது. அந்த வகையில் ரஹ்மான் ராஜாவை தாண்டி சென்றவர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் இதை வேறு விதமாக பார்க்கலாம். (இதுவும் நேரடி ஒப்பிடல் இல்லை.)

76 இல் இருந்து 92 வரை ராஜா, 92 இல் இருந்து 2008 வரை ரஹ்மான். இந்த 16 வருடங்களை ஒப்பிடுங்கள். புகழின் உச்சத்தில் இருந்தும் ரஹ்மான் இன்னும் 100 படங்களுக்கு கூட இசையமைக்கவில்லை. ராஜாவோ சுமார் 800 படங்கள், எல்லா படங்களிலும் இன்னும் 100 ஆண்டுகளுக்கு நாம் அலசவேண்டிய நுட்பம் கொண்ட பிண்ணணி இசை. அந்த கணத்தில் நிகழ்ந்த அதிசயம் போல பாடல்கள். இவை அத்தனையும் ராஜா என்ற தனி மனிதன் முழுமையாக எழுதிக்கொடுத்தது. ரஹ்மானைப்போல விக்கி விநாயக்ராமின் பையனை(பெயர் மறந்து விட்டது) பல வகை தாளங்களை தனித்தனியே போடச்சொல்லி, பதிவு செய்து, அவைகளின் பல கலவைகளை இரவு முழுக்க ஆராய்ந்து ̀அழகான ராட்சசி’யின் தாளமாக தருவது அல்ல. ரஹ்மான் செய்வது மீது எனக்கு எந்த விமர்சனமில்லை. ஆனால் அது நாம் புரிந்து கொள்ளும் சட்டகத்தில் அடக்கும் மிக திறமை + உழைப்புக்கு பின் விளையும் இசை. ராஜா, பலர் கவனித்திருக்க வாய்ப்பு குறைவாக உள்ள, ̀பகவதிபுரம் ரயில்வே கேட்’ என்ற படத்தில் ̀செவ்வரளி தோட்டத்திலே’ அளித்தது இந்த புரிதல்களுக்கு அப்பாற்பட்ட அதிசயம்.

இருந்தாலும் ராஜாவை சினிமாவிற்கு பொருத்தமானவராக இல்லை என்றுதான் என் பதிவில் கருத்து கூறியிருக்கிறேன். இதை இன்னொரு சந்தர்ப்பத்தில் எழுதியிருக்கிறேன். “சினிமாப் பாடலிசையின் தேவைகளை மிக பொருத்தமாய் (ஒரு விஸ்வநாதனைப் போல, ரஹ்மானைப் போல) அவராய் திருப்தி செய்ய இயலவில்லை என்றும் தோன்றுகிறது” என்பதுதான் என் கருத்து.

இந்த வகையில் ராஜா குறித்தும் மற்றவர்கள் குறித்தும் பேசவும், உரையாடவும் நிறைய உள்ளது. (20 ஆண்டுகளாய் குப்பைகளை உற்பத்தி செய்த) ஹிந்தியில் வெற்றி பெற முடியவில்லை, வெள்ளைக்கார சினிமாக்காரன் ரஹ்மானை கூப்பிட்டான் ராஜாவை கூப்பிடவில்லை என்கிற வாதங்களை முன்வைத்து அல்ல. (உண்மையில் பல மேற்கின் இசை அறிஞர்கள் ராஜாவைத்தான் கொண்டாடுகிறார்கள், ரஹ்மானை அல்ல என்பதுதான் உண்மை. ஆதாரத்துடன் மேற்கோளுடன் சொல்ல முடியும்).

மற்றபடி ....கேள்வி கேட்டு பதில் சொல்லி விவாதிக்கும் விஷயம் இதுவல்ல. ....கருத்துக்களை மாற்றும் நோக்கமும் எனக்கில்லை. ராஜா மீதான் வெறுப்பு என்று காரணம் இல்லாம் பரவிகொண்டிருக்கும் அலையில் .... விழக்கூடாது

நன்றி!
***********************************************
இவை Kaargi Pages அவர்களின் கருத்துகள்:


முதலில் இந்தியில் இசை அமைப்பது இந்தியப் புகழ் பெற்றுவிட்டதற்கான ஒரு பென்ச்மார்க் என்பது போலவும். ஹாலிவுட்டில் இசையமைப்பது உலகப் புகழுக்கான பென்ச்மார்க் போலவும் <கூறுவது தவறு>

ரஹ்மான் ஒரு திறமைசாலி என்பதை மறுக்கவில்லை. ஆனால் அவர் இளையராஜாவை தாண்டிச் சென்றாரா? அப்படி அவர் இளையராஜாவைத் தாண்டிவிட்டார் என்று .... சொல்வதானால் அவர் இளையராஜாவால் கையாள முடியாத எந்த வகை இசை வடிவத்தை உருவாக்கினார் என்பதை .... விளக்க வேண்டும்.

அதே நேரம் இளையராஜாவோ தனக்கு முன் இருந்த எல்லா திரைஇசை அமைப்பு முறைகளையும் மரபுகளையும் வடிவங்களையும் (மோனோடோன்) உடைத்து இசையை ஒரு பலவண்ணக் கலவையாக பாமரனுக்குக் காட்டினார். நாட்டுப்புற மெட்டு கருநாடக மெட்டாக உருமாறுவதாகட்டும்.. தமிழக நாட்டுப்புற இசையும் கருநாடக இசையும் மேற்கத்திய செவ்வியல் இசையும், ஜாஸ் ராக் போன்ற மேற்கத்திய இசை வடிவங்களும் ஒன்றன் மேல் ஒன்றாக - ஒன்றில் ஒன்று கலந்து - ஒன்றை ஒன்று தொடர்வது போல் - ஒன்று இன்னொன்றாக உருமாறுவது போல - ஒன்றின் வடிவத்தில் இன்னொன்றின் உள்ளடக்கம் கொண்டு - இப்படி அவர் செய்யாத பரிசோதனை முயற்சிகள் இல்லை. அவரின் ஒவ்வொரு பரிசோதனை முயற்சியும் இன்று வரையில் ஒரு ரீங்காரமாய் நம்மை விட்டு அகலாமல் சுற்றிச் சுற்றி வந்து கொண்டே இருக்கிறது..

இந்த மறுமொழியை டைப் அடிக்கும் போதே கணினியில் இளையராஜாவின் இசையில் போன மாதம் வெளியான ஒரு கன்னட பாடலான "ஹொடதவனே" ஓடிக் கொண்டிருக்கிறது ( http://www.youtube.com/watch?v=RHSpqVaud80 ) இந்த மனிதருக்கு 67 வயதாகி விட்டது என்பதை அவரைக் கண்டிராத ஒருவர் இந்தப் பாடலைக் கேட்டால் ஒப்புக் கொள்ளவே மாட்டார். ஒரு 'குத்து' பாட்டிற்குள் ஆங்காங்கே மெல்லியதான ஒரு மெலடி - இப்போதைய "குத்தர்களின்" ( ஏ.ஆர், ஹாரிஸ், யுவன், தொடங்கி இமான் வரையிலான) பாணியை கேலி செய்யும் ஒரு ஆர்கெஸ்ட்ரேஷன்.. அந்த ரிதம்... ஓ...

ஏ.ஆர் ரஹ்மான் சில குறிப்பிடத்தகுந்த பாடல்களைக் கொடுத்திருக்கிறார் என்பதை மறுப்பதற்கில்லை. அவரின் தளம் வேறு. அவர் இன்றைய உலகமயமாக்கல் யுகத்தின் பிரதிநிதி. இளையராஜாவோ எழுபதுகளில் கொந்தளித்துக் கொண்டிருந்த ஒரு உலகத்தை பிரதிபலித்தவர் - கட்டுமீறத் துடித்த இளைஞர்களின் - ஒரு வெடித்துக் கிளம்பிய ஒரு குரல். அன்னக்கிளியின் டைட்டில் பி.ஜி.எம்மில் பீறிட்ட அந்த வயலின்.. எண்பதுகளில் அவரின் இசையில் பிரதான இடத்தைப் பிடித்திருந்த அந்த மெட்டாலிக் ஸ்ட்ரிங் கிடார்கள்.. அவரது பாடல்களில் இடம்பெற்ற ஒவ்வொரு இண்டர்லூட்களிலும்(இடைஇசை) ப்ரீலூட்களிலும் (துவக்க இசை) நமது நரம்புகளைப் பிடித்து இழுத்த அந்த தந்திக் கம்பிகள்.. அவர் அன்றைய தனது சூழலைப் பிரதிபலித்தார்.. அந்த காலகட்டத்தின் இளையராஜாவின் இசை விரிவாக ஆய்வு செய்யப்பட வேண்டியது

இன்றைய மாறிப்போன சமூக சூழல் பாஸ்ட் புட் கேட்கிறது. ரஹ்மான் சிறப்பான பீஸ்ஸா தயாரிப்பாளர்.. அவர் தனது சூழல் எதைக் கேட்கிறதோ அதை விற்கிறார்.. இளையராஜாவோ தனது படைப்பின் வடிவத்தை சூழலின் டிமாண்டிற்கும் உள்ளடக்கத்தை தனது ஒரிஜினாலிட்டியுடனும் கொடுக்க முடியுமா என்று பரிசோதித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறார்... கடந்த ஒரு பத்தாண்டுகளாக அந்தப் பரிசோதனையின் சில வெளிப்பாடுகள் ஏற்றுக் கொள்ளப்பட்டது ( சில உதாரணங்கள் - ஹேராம், விருமாண்டி, சிறைச்சாலை, ஆதினகலூ(கன்னடம்), நான் கடவுள், ப்ரேம் கஹானியின்(கன்னட) பாடல்கள், வால்மீகி,) சில ரசிகர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

அவர் தனது காலம் முழுவதும் பரிசோதனைகள் செய்து கொண்டிருப்பார்.. அந்தப் பரிசோதனைகள் எதிர்காலத்தில் இசை ஆய்வு செய்யும் மாணவர்களுக்கு ஒரு புதையலாக காத்திருக்கும்.

நாளை சந்தையில் வாடிக்கையாளர்கள் பர்கர் வேண்டும் என்று கேட்டால் ரஹ்மான் சிறப்பான பர்கர்களை விற்கத்துவங்குவார் - அவர் ஒரு நல்ல திறமையான வியாபாரி. பர்கரோ பீஸாவோ ஒரு ஏழு மணி நேரம் போனால் கழிந்து போகும்.

எ.அ.பாலா

நன்றி: ரோஸாவசந்த் & Kaargi Pages

Monday, August 17, 2009

546. சிங்கை நாதனுக்காக ஒரு வேண்டுகோள்

சக தமிழ் பதிவரும் சிங்கப்பூரில் வசிக்கும் நண்பருமான திரு. செந்தில் நாதன் (வலைப்பதிவில் சிங்கை நாதன்) கடந்த 2005ம் ஆண்டு முதல் இதய நோயால் பாதிக்கப்பட்டு உள்ளார். இப்பொழுது மிகவும் கவலைக்கிடமான நிலையில் இருக்கும் அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய சிங்கப்பூர் டாலரில் 100,000 வரையில் தேவைப்படும் என்று சிங்கை நண்பர் குழலி மின்னஞ்சல் மூலமாக தெரிவித்திருந்தார்.

ஓரிவரின் தனிப்பட்ட உதவி கண்டிப்பாக போதாதென்பதால் சக பதிவர்களான / வாசகர்களான உங்களிடமும் நண்பர் செந்தில்நாதனுக்காகவும் அவரது குடும்பத்தினருக்காகவும் இந்த வேண்டுகோள். செந்திலுக்கு உதவ நினைப்பவர்கள் கீழ்கண்ட அக்கவுண்ட்டுகளுக்கு தங்களால் இயன்ற பணத்தை (அது எவ்வளவு சிறிதாக இருப்பினும்) அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறேன்.

ICICI Account Details

Account Number: 612801076559
Name: M.KARUNANITHI
Branch: Tanjore

Singapore Account Details

Account Number: 130-42549-6
Name: Muthaiyan Karunanithi
Bank: DBS - POSB Savings

அமெரிக்காவில் இருக்கும் நண்பர்கள் செந்திலின் மைத்துனரின் அக்கவுண்டுக்கு அனுப்பலாம். அவரது அக்கவுண்ட் விபரம்

LastName: Sethuraman
FirstName: Siddeswaran
Bank Name: WaMu (Washington Mutual Bank)
Bank Address; 21241 Hawthorne Blvd, Torrance, CA 90503
Bank A/cNo: 9282741060
Routing No: 322271627
A/c Type: Checking A/c

siddeswaran.s@gmail.com
Res No: 001 - 310 - 933- 1543

Paypal details as follows:

e-mail id: rajan.sovi@gmail.com
Then choose the currency
Then choose the reason for transfer- if possible add a note "Senthil's treatment".

பணத்தை அனுப்புபவர்கள் Transaction Remarksல் “To Senthilnathan" என குறிப்பிடும்படியும் கேட்டுக்கொள்கிறேன். இந்தப் பதிவைப் படிக்கும் சக பதிவுலக நண்பர்களும் முடிந்தால் உங்களது பதிவிலும் சிங்கை நாதனுக்கு உதவுமாறு பிற பதிவர்களை அழைக்கக் கேட்டுக் கொள்கிறேன்.

சகோதரி சாந்தி செந்தில்நாதன் அவரது கல்லூரி நண்பர்களுக்கு அனுப்பிய மடலையும் இந்தப் பதிவோடு இணைத்துள்ளோம்.

Hi Friends,

This is santhi from our Computer Science & Engineering ( VMKV98) group.I am currently in singapore.My husband Mr.Senthil nathan is also a software engineer working in singapore.Now he has got admitted into the singapore general hospital for his present serious heart condition in the National Heart centre.He is suffering from IDCM.His heart needs to be transplanted asap.To make him live up to getting the correct donor heart he has to get implanted with VAD(ventricular assist device).At this moment he cannot travel to india to get any treatments over there.Here doctors estimate about 100000 SGD indian money value approx(33 Lakhs).Our savings n all getting used for his present frequent admissions in to the hospital and his previous pacemaker and CRTD etc.He was diagnosed with this heart problem on 2005 and from that time he is on medications.We have a girl baby of about 5 years old.I m helpless in this situation and i request all of u to pray for me and help me in this critical situation.Thanks for understanding my situation.I dont have much words to explain my sufferings.I dont have any other way thats y i m composing this mail.I am sad about that i m sharing my worries with our batchmates.I expect all ur prayers at this moment.

Thanks
Regards,
Santhi Senthil Nathan.


குறிப்பு 1:


பல நல்ல உள்ளங்கள் ஏன் சிங்கை நாதன் அவர்களை இந்தியாவிற்கு அழைத்து வந்து சிகிச்சையளிக்க கூடாது என தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகிறார்கள். அவர் தற்போதிருக்கும் நிலையில் விமானப் பயணம் மேற்கொள்ள இயலாது. அது ஆம்புலன்ஸ் விமானமாக இருந்தாலும் அதில் பயணிக்க இயலாது. எனவே இந்தியாவிற்கு வந்து சிகிச்சை எடுக்க வாய்ப்பே இல்லாத நிலையில் தான் சிங்கப்பூரில் சிகிச்சையை தொடர்வது என்ற முடிவெடுக்கப்பட்டுள்ளது.


நீங்கள் தருவது எவ்வளவு குறைவாக இருந்தாலும் கொடுங்கள். சிறு துளி பெருவெள்ளம்.


முடிந்தளவு உங்கள் நண்பர்கள் வட்டத்தில் சொல்லி, அவர்கள் தரும் தொகை அது எவ்வளவு சிறியதாக இருந்தாலும் கொடுத்து உதவுங்கள்.


தொடர்ந்து உதவுங்கள். உதவும் அத்தனை உள்ளங்களுக்கும் மீண்டும் எங்கள் நன்றிகள்.


குறிப்பு 2:

செந்தில் நாதனின் 5 வயது குழந்தையின் முகத்தில் புன்னகை பூக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை. குழந்தைக்கு எங்களது அன்பு.

குறிப்பு 3:

இது பற்றிய மேலதிக விபரங்களுக்கு :
http://kvraja.blogspot.com/2009/08/very-urgent.html
http://govikannan.blogspot.com/2009/08/blog-post_13.html
http://kusumbuonly.blogspot.com/2009/08/blog-post_12.html
http://www.narsim.in/2009/08/blog-post_13.html
http://cablesankar.blogspot.com/2009/08/1.html
http://www.nilaraseeganonline.com/2009/08/blog-post_13.html
http://sandanamullai.blogspot.com/2009/08/blog-post_12.html


குறிப்பு 4:

நரசிம் அவருடைய ப்ளாகில் -
33 லட்சத்தை மிக பெரிய தொகையாக பார்க்காமல் அதை 1000 பேரால் வெறும் 3000 ரூபாயாக கொடுக்க முடியும் என்று மிகவும் பாசிடிவாக தனது என்னத்தை வெளி படுத்தி உள்ளார்..

அந்த ஆயிரம் பேரில் நாம் எத்தனை பேர் ?


அனைத்து நண்பர்களுக்கும்:

****************************************
பண உதவி செய்ய விரும்பும், இந்தியாவிலிருக்கும் நண்பர்கள் / வெளிநாட்டிலிருந்து (ரூபாய்) காசோலையாக (அ) என் வங்கிக் கணக்குக்கு Direct credit செய்து உதவ விரும்பும் அன்பர்கள், கீழ்க்கண்ட மின்னஞ்சல்களுக்கு எழுதலாம்.

balaji_ammu@yahoo.com
rajni_ramki@yahoo.com

இங்கே பின்னூட்டத்தில் உங்கள் மின்மடல் முகவரியை இட்டாலே போதும். நான் / ராம்கி உங்களுக்கு பணம் அனுப்புவதற்கான விவரங்களை (வங்கி சம்மந்தப்பட்ட மற்றும் எங்கள் முகவரி) தெளிவாக உங்களுக்கு தெரிவிக்கிறோம்.
**********************************

கல்வி மற்றும் மருத்துவ உதவிக்காக முன்னர் பணம் அனுப்பிய நண்பர்களிடம், எனது மற்றும் ராம்கியின் வங்கிக் கணக்கு தகவல்கள், நான் அப்போது அனுப்பிய மடல்களில் இருக்கும்.

எ.அ.பாலா

Sunday, July 19, 2009

545. அஞ்சலி: கானசரஸ்வதி டி.கே.பட்டம்மாள்

ஸ்ரீ… சு ப் ர ம ண்  யா ய  ந ம ஸ் தே …   ந ம ஸ் தே ….

சுப்பிரமணியரின் திருவடியில் இந்திராதி தேவர்கள் தங்கள் கிரீடங்கள் தரையில் பட வீழ்ந்து வணங்குகிறார்கள்.
கான சரஸ்வதி காம்போதி ராகம் பாட, அவள் திருமுன் ஸ்வரதேவதைகள்  அஞ்சலி செய்து நமஸ்கரிக்கின்றனவோ?

மனஸிஜ கோடி கோடி  லாவண்யாய, தீன சரண்யாய..

மனதின் கோடி கோடி அழகுகள் திரண்டு உருவெடுத்து பிரவாகமாகி இசையாய் பொங்கிப் பெருகுகின்றனவோ?
இந்த சங்கீதம்  நாதமுனிகள் சொன்ன தேவகானம் தான், மனுஷ்ய கானமே அல்ல என்ற உணர்வு ஏற்படுகிறது.

அவருடைய பிரக்யாதி அப்பேற்பட்டது.   இளவயதிலேயே "பட்டம்மா நீ பாடுபட்ட பாட்டம்மா" என்று  வாயார ஆசிர்வதித்தாராம் சங்கீத அறிஞர் ஜஸ்டிஸ் டி.எல்.வெங்கட்ராம ஐயர்.  டைகர் வரதாசாரியார்  "கான சரஸ்வதி" என்று பெயர் சூட்டினார். சங்கீத கலாநிதி, காளிதாஸ் சம்மான் என்று பல விருதுகள்.  நெல்லையில் பாரதியார் பாடல்களை அவர் பாடுவதைக் கேட்ட மகாகவியின் மனைவி செல்லம்மா  கண்களில் தாரை தாரையாகக் கண்ணீர் பெருகக் கட்டியணைத்தாராம். அவரது 80வது வயதில்  "பத்ம விபூஷண்"  அளித்து இந்திய அரசு தன்னை கௌரவப் படுத்திக் கொண்டது.

கர்நாடக சங்கீதம் என்ற செவ்வியல் இசை வடிவம் தியாகராஜர், தீட்சிதர், சியாமா சாஸ்திரிகள் ஆகிய மும்மூர்த்திகளின்  காலத்தில்  சிகரங்களைத் தொட்டு மகோன்னதத்தை அடைந்தது.  பின்னர்  20ஆம் நூற்றாண்டின்  தொடக்கத்தில் நவீன மதிப்பீடுகளும், நகர்ப்புற  கலை ரசிகர்களும் உருவாகி வளர்ந்த போது, அதன் அடுத்த பொற்காலம் தொடங்கியது.  அந்தக் காலகட்டத்தில்,  கர்நாடக இசையின் பல பரிமாணங்களை உருவாக்கி, வளர்த்தெடுத்த முன்னோடிகளில் முக்கியமானவராக  டி.கே பட்டம்மாள் விளங்கினார்.  எம்.எஸ்.சுப்புலட்சுமி, டி.கே. பட்டம்மாள், எம்.எல்.வசந்தகுமாரி ஆகிய மூவரும் சங்கீதத்தின்  முப்பெரும் தேவியர்  என்றே இன்று போற்றப் படுகின்றனர்.

பட்டம்மாளின் கலை ஆகிருதி ஆழமும்,  பன்முகப் பட்ட விகசிப்பும் கொண்டது. சம்பிரதாயமான சங்கீத சுத்தம் சிறிதும் பிசகாமல்,  பாரம்பரியத்தைக்  கட்டிக் காப்பதில் அவர் கண்ணும் கருத்துமாயிருந்தவர். அதே சமயம், தன் வாழ்நாளில் அனாயாசமாக மரபு மீறல்களை நிகழ்த்தியபடியே,  மரபைக் கடந்து சென்று கொண்டும் இருந்தார்.

1940: சகோதரர் டிகே.ஜயராமனுடன்

1940: சகோதரர் டிகே.ஜயராமனுடன்

1919ல் காஞ்சிபுரத்தில் தாமல் கிருஷ்ணசாமி தீட்சிதரின் ஆசாரமான குடும்பத்தில்  அலமேலுவாகப் பிறந்து  "பட்டா" என்று செல்லமாக அழைக்கப் பட்டார், பிறகு அந்தப் பெயரே நிலைத்து விட்டது. அவரது தந்தையார் பெரிய சங்கீத ரசிகர். தாயார் ராஜம்மா அபாரமான பாடகி.  ஆனால் ஆசாரம் கருதி, பிராமணப் பெண்கள் பாடக் கூடாது என்ற வழக்கு இருந்ததால், ராஜம்மாவின் சங்கீதம் குடும்பம் மற்றும் உறவினர் வட்டத்தில் கூட அறியப் படாமல் போயிற்று..  இத்தகைய சூழலில், 10 வயதிலேயே அப்போது மெட்ராஸ் கார்ப்பரேஷன் ரேடியோ என்றழைக்கப் பட்ட "ஆல் இந்தியா ரேடியோ"வில் தனது முதல் பாடலைப்  பட்டம்மாள் பாடினார்.  1932ல் சென்னை ரசிக ரஞ்சனி சபாவில் முதல் கச்சேரி.  1939ல் தன் இருபதாம் வயதில் ஆர்.ஈஸ்வரனை மணந்தார். பின்னர், மலைமுகடுகளிலிருந்து ஓடையாகக் கீழிறங்கிப் பேராறாகப் பாயும் காவேரி போல அவரது சங்கீதம் பிரவகித்தது.

ஆரம்ப கட்டத்தில்  குடும்பமும், அன்றைய ரசிகர் வட்டமும் அவரது இசைத் திறனைக் கண்டுகொண்டு அதை முடக்காமல், மாறாக ஊக்குவித்து மலரச் செய்தது  காலத்தின் கையெழுத்து, கலையுலகின் சௌபாக்யம் என்பதைத் தவிர வேறு என்ன சொல்ல முடியும்?  குருகுல முறையில் கல்வி கற்க வாய்ப்பில்லாததால்,  குடும்பத்திலேயே அவரது தொடக்க கால சிட்சையும், சாதகமும் பெருமளவில் நிகழ்ந்திருக்கிறது..  கீர்த்தனங்களையே முதலில் நேரடியாகக் கற்றுக் கொண்டு  அவற்றைப் பாடிப் பாடி சாதகம் செய்தே இசை நுணுக்கங்களைக் கற்றுக் கொண்டதாகவும், சரளி வரிசை, ஜண்டை வரிசையெல்லாம்  படிக்கவே இல்லை என்றும் பின்னாளில் பட்டம்மா பேட்டிகளில் கூறியிருக்கிறார்..   ஆறு வயதாக இருந்த போதே  அதிகாலை மூன்றரை மணிக்கு எழுந்து  ஆறு மணி வரை சியாமளா தண்டகம், முகுந்தமாலா போன்ற சுலோகங்களையும்,   எளிய கீர்த்தனங்களையும் பாடி அசுர சாதகம் செய்வாராம்..  பிறகு பள்ளியிலிருந்து வந்தபின் இரவு வரை சாதகம்!  ஒவ்வொரு கிருதியும் கைவருவதற்கு  குறைந்தது 50 முறையாவது பாடி சாதகம் செய்திருக்கிறேன்  என்று தனது 80வது வயதில் அளித்த ஒரு பேட்டியில் நினைவு கூர்ந்திருக்கிறார்.  ("A lifetime for Carnatic Music", Frontline,  August 13, 1999). இன்றைய வித்வான்கள் இந்த அளவுக்கு சாதகம் செய்வதில்லை என்பதைத் தன் மனக்குறையாகவும்  சொல்லிவந்தார்.

பெண்கள் கச்சேரி செய்ய ஆரம்பித்து, அது ஏற்றுக் கொள்ளப் பட்ட காலங்களிலும், "ராகம் தானம் பல்லவி"  என்பது  ஆண் பாகவதர்களின் கோட்டையாகவே கருதப் பட்டது.  பெண்குரலின் வீச்சும், சாரீரமும் தானம், பல்லவி பாடுவதற்குப் போதுமானதல்ல, அப்படியே பாடினாலும் பரிமளிக்காது என்பது போன்ற எண்ணங்கள் இருந்தன.  இவற்றை உடைத்தெறிந்து  பல கன ராகங்களின் பல்லவிகளை   அவற்றிற்குரிய முழு லட்சணங்களுடன், கடினமான தாளங்களிலும் பாடி  "பல்லவி பட்டம்மாள்" என்ற பட்டத்தையும் பெற்றார்  பட்டம்மா.  இப்போது 85 வயதாகும் என் பாட்டி,

" நெஞ்சே நினை அன்பே துதி நெறி குருபரனே
அஞ்சாதிரு நம் பாவங்கள் பஞ்சாய்ப் பறந்திடுமாகையால்  (நெஞ்சே…)

என்ற பட்டம்மாள் பாடிய ஜகன்மோகினி ராக பல்லவியை  அவரது சிறுவயதில் ரெகார்டில் அடிக்கடி கேட்டு ரசித்ததை  பரவசத்துடன் இப்போதும் நினைவுகூர்கிறார்.

dkpattamal-midதாய் தந்தையரையே ஆதி ஆசான்களாகக் கொண்டு,  பின்னர் காஞ்சிபுரம் நயினாபிள்ளை, முத்துஸ்வாமி தீட்சிதரின் வம்சாவளியில் வந்த அம்பி தீட்சிதர்,  பாபநாசம் சிவன்,  டி.எல் வெங்கட்ராம ஐயர் என்று தனது குருமார்களை அவரது இசை தானாகத் தேடிக் கண்டு அடைந்தது. அப்பாதுரை ஆசாரியிடம் திருப்புகழும்,  வித்யால நரசிம்ஹுலு  நாயுடுவிடம்  பதங்களும், ஜாவளிகளும் கற்றுக் கொண்டதாகவும் அவர் பின்னாளில் கூறினார்.

இசை அளவு கோலில் low-alto, high tenor range என்று  அழைக்கப் படுகின்ற அனைத்து ஸ்தாயிகளிலும் சஞ்சரிக்கும் குரல் வளம் (full throated voice)  பட்டம்மாவின் விலைமதிப்பற்ற சொத்தாக இருந்தது.  பட்டின் நேர்த்தியும், தேனின் அடர்த்தியும், மலரின் மென்மையும், வீணையின் கம்பீரமும்,  அருவியோசையின் ஒழுக்கும் எல்லாம் சேர்ந்த ஒரு அற்புதம் என்று அந்தக் குரலைக் கற்பனை செய்யலாம் !  ஸ்ருதியும், லயமும் சிறிதும் பிசகாமல் ராக பாவம் முழுமையாக நிறைந்து  அந்தக் குரலோடு சேர்வதால் விளையும்  சங்கீதம் தான் பட்டம்மாளின் இசை.   அதோடு, அர்த்த பாவமும், உணர்ச்சிமயமான வெளிப்பாடும்  ஒன்றுகலப்பதால் உண்டாகும் தருணம் தான் இதனை ஒரு இசைத் தொழில்நுட்ப வித்தகம்  என்ற  நிலையிலிருந்து  மேலெழுப்பி  ஒரு பூரணத்துவம் ததும்பும் அனுபவமாக மாற்றுகிறது.

நமது மரபிசையில் பாவத்தை வெளிப்படுத்துவதில் வாய்ப்பாட்டுக்  காரர்களுக்கு இருக்கும் சாத்தியங்கள் வேறு இசைக் கருவிகளில் கிடையாது.  மொழியும், உணர்வும், படிமங்களும்  இசையில்  ரூப அரூபங்களாக ஊடுருவும்  இந்த நிலை,  இசை என்கிற  தன்னளவில் முழுமையான அபோதபூர்வமான (totally subjective in itself) கலை வடிவத்தை,  ஓவியமும், இலக்கியமும் போன்று போதமும், அபோதமும் கலந்த கலை வடிவமாக மாற்றுகிறது. குரலிசை, அதுவும் விஸ்தாரமான வார்த்தை அடுக்குகள் கொண்ட கீர்த்தனங்கள் எல்லாம் இசையின் "தூய்மை"யை ஒருவிதத்தில் பங்கப் படுத்தும் சமாசாரங்கள் என்று சொல்லும் சில தூய்மைவாதிகள் (puritans)  இந்த விஷயத்தைக் கவனிப்பதில்லை என்றே சொல்லவேண்டியிருக்கிறது.

பட்டம்மாள்  ஆரம்பத்திலிருந்தே இந்த அம்சத்தை நன்கு உணர்ந்த குரலிசை மேதை.  "ஐம்பது வயதானபோது லயத்தோடு, பாவத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கத் தொடங்கினேன்..  பாவத்தை மையமாக வைத்துப் பாடுவது, இசையை உள்முகமாகத் திருப்புகிறது.. அது ரசிகர்களையும் உள்முகமாக்கி அவர்கள் உள்ளத்தைச் சென்று தொடுகிறது" என்று  பட்டம்மாள் ஒருமுறை கூறினார்.  கீர்த்தனங்களின் சொற்களை தெளிவான உச்சரிப்போடு, அவற்றின் பொருள் விளங்குமாறு பாடுவது  முக்கியம் என்பதை உணர்ந்து அதை ஆரம்பத்திலிருந்தே கடைப் பிடித்தவர் பட்டம்மா. அதோடு, எந்தப் பாடலையும், அவசர கதியில் பாடுவது என்பது அவரிடம் அறவே கிடையாது .. துரித காலம் என்பதை  இதோடு போட்டுக் குழப்பிக் கொள்பவர்கள் பட்டம்மாளின்  "ராமா நீ பை"  என்ற கேதார ராக தியாகராஜ கிருதியைக் கேட்க வேண்டும்.

தீட்சிதர் கிருதிகளை  அவற்றின் பாரம்பரிய, மூல இசை வடிவத்தில் கச்சேரி மேடைகளில் பெருமளவில் பிரபலப் படுத்தியதில் பட்டம்மாளுக்குப் பெரும் பங்கு உண்டு…

தியாகராஜ யோக வைபவம்
ராஜயோக வைபவம்
யோக வைபவம்
வைபவம்
பவம்
வம்

என்று அடுக்கடுக்காக ஆனந்த பைரவியில் சொகுசு நடை பயிலும் கிருதியை பட்டம்மாள் பாடிக் கேட்பது  பரமானந்த அனுபவம்!

ஸ்லோகங்களையும், விருத்தங்களையும் அவற்றின் பக்தி பாவமும், ஓசை நயமும் வெளிப்படுமாறு அழகாகப் பாடியவர் பட்டம்மா. "ஆலமா மரத்தின் இலைமேல் ஒரு பாலகனாய்… "  என்ற திருப்பாணாழ்வாரின் அழகிய பிரபந்தம் அவர் குரலில்  இன்னும் மெருகேறுகிறது என்பதைச் சொல்லவும் வேண்டுமோ?  இன்றைய கச்சேரிகள் விருத்தம் முக்கிய இடம் பெறச் செய்ததில் அவருக்குப் பங்குண்டு.

"தாய்நாட்டை நேசிக்க வேண்டும், என்பதையும் தேசபக்தியும் சிறு வயதிலேயே என் அப்பா கற்றுக் கொடுத்தார்.  அதனால் பாரதியார் பாடல்களில் இயல்பாகவே பிடிப்பு ஏற்பட்டது"   என்று ஒருமுறை சொன்னார். பாரதியார் பாடல்களைத் தமிழகமெங்கும் இசை வடிவில் முதலில் கொண்டு சென்றதில் அவருக்குப் பெரும் பங்கு உண்டு. 1947ல் தேசம் விடுதலை அடைந்த நள்ளிரவு "ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே" என்று சுதந்திர நாதமாக வானொலிகளில் ஒலித்த தமிழ்க் குரல் அவருடையது.  தீராத விளையாட்டுப் பிள்ளை, வெற்றி எட்டுத் திக்கும் எட்ட, பாருக்குள்ளே நல்ல நாடு போன்ற பாடல்கள்  இன்று எங்கும் பாடப் படும் ராக வடிவங்கள்  எல்லாம் பட்டம்மா உருவாக்கியவையே.  "சின்னஞ்சிறு கிளியே" பாடலை அவர் பாடும் tempo வும், ராகவடிவமும், இன்று நாம் பிரபலமாகக் கேட்கும் வடிவத்தை விட மிக அழகாக இருக்கிறது !

dkp-oldதியாக பூமி, நாம் இருவர் ஆகிய திரைப் படங்களில் பட்டம்மா பாடிய திரைப் பாடல்கள் தமிழ்த் திரையிசை வரலாற்றில் சிறப்பிடம்  பெறுபவை.  தமிழிசை இயக்கம்  அரசியல் மயமாக்கப் பட்டு,  ஆர்ப்பாட்டத்துடன் முன்வைக்கப் பட்ட காலத்திற்கு முன்பாக இயல்பாவே  கோபாலகிருஷ்ண பாரதியார், முத்துத்தாண்டவர், பாபநாசம் சிவன் ஆகியோரது தமிழ்ப் பாடல்களை மேடைகளில் பாடிவந்தவர் பட்டம்மா.  "தமிழ் மீது எனக்கு இருந்த அன்பினால் தமிழ்ப் பாடல்களைப் பாடினேன்,  ஒரு அரசியல் ஸ்டேட்மெண்டாக அல்ல" என்று 80 வயதில் அளித்த பேட்டி ஒன்றில் நினைவு கூர்ந்தார்.

மேடைக் கச்சேரி என்பது ஒரு அறுசுவை உணவு போன்று அதன் முழு சுவையையும் ரசிகன் அனுபவிக்குமாறு பரிமாறப் படவேண்டும் என்பதற்கு இலக்கணகாக பட்டம்மாளின் கச்சேரிகள் அமைந்திருந்தன என்பதை, அவற்றை இப்போது கேட்கும் என் தலைமுறையினரால்  நன்றாகப் புரிந்து கொள்ள முடிகிறது. அதிக பட்சம் மூன்று நான்கு முக்கிய உருப்படிகள். சிலவற்றில் கொஞ்சம் அதிக துக்கடாக்கள்.  இன்று ஒரு கச்சேரியில் எக்கச்சக்க பாடல்கள் பாடும் சில இளம், நடுவயது வித்வான்கள் கவனிக்க வேண்டிய விஷயம் இது..

ஆக, இதெல்லாம் சேர்த்துத் தான் பட்டம்மாள் "பாணி"  என்றாகிறது.   மறைந்த டிகே.ஜயராமன் (பட்டம்மாளின் சகோதரர்)  பட்டம்மாளுடன் சேர்ந்தும், தனியாகவும் பல கச்சேரிகள் செய்திருக்கிறார்.  லலிதா சிவகுமார், நித்யாஸ்ரீ மகாதேவன், பவதாரிணி அனந்தராமன் என்று சீடர்கள் இருந்திருக்கிறார்கள்..  ஆனாலும் "பட்டம்மாள் பாணி"  என்பது அவருக்கே உரியது. "கன்னனொடு கொடை போயிற்று; உயர் கம்பநாடனுடன் கவிதை போயிற்று" என்று பாரதி சொன்னாற்போல, அவருடனேயே அந்தப் பாணியும் போய்விட்டது !

அநாதியாக, அனந்தமாக, பிறப்பு இறப்பு அற்றிருக்கும் பரம்பொருள் பிரபஞ்ச லீலையாக  தன்னை மீண்டும் மீண்டும் பிறப்பித்துக் கொள்கிறது என்கிறது நம் மரபு.  இசை  பரம்பொருளின் வடிவமே என்று  சொல்லி அதைக் கண்டுணர்ந்த நாதயோகிகளையும்  நம் மரபு அளித்திருக்கிறது.

"ஒரு பக்தியுள்ள ஹிந்துவாக, பிறவா வரத்தையே இறைவனிடம் வேண்டுகிறேன்… "பிறவா வரம் தாரும் இறைவா, மறுபடி பிறந்தாலும் இசையை மறவா வரம் தாரும்"  என்பது தான் என் பிரார்த்தனை" என்று 1999ல் ஒரு பேட்டியில் குறிப்பிட்டார். 90 வயது வரை சங்கீதத்தையே உபாசித்து, அதில் ஒன்றுகலந்த நிறைவாழ்வு.

கான சரஸ்வதிக்கு அஞ்சலி.

(கட்டுரையில் உள்ள இணைப்புகள் அனைத்தும்  டி.கே. பட்டம்மாள் பாடிய பாடல்களின் audio வடிவங்களுக்கு இட்டுச் செல்லும்).

நன்றி: தமிழ் இந்து வலைத்தளம் (www.tamilhindu.com), கட்டுரை ஆசிரியர் ஜடாயு (http://jataayu.blogspot.com/)

Sunday, July 12, 2009

544. மீண்டும் ஒரு ஏழைப்பெண்ணின் கல்விக்கு உதவி வேண்டி

அன்பான வலைப்பதிவுலக நண்பர்களே,

இப்பதிவை சற்று சிரமம் எடுத்து முழுவதும் வாசிக்கும்படி, வாசகர்களாகிய உங்களுக்கு, முதலில் ஒரு வேண்டுகோள் !!!

2005-இல் பிரமிக்க வைக்கும் கௌசல்யா என்ற என் இடுகையைத் தொடர்ந்து, பல நண்பர்கள் பொருளுதவி செய்தனர். அதன் வாயிலாக கௌசல்யாவின் முதலாண்டு மருத்துவப்படிப்புக்கு உதவ முடிந்தது. தகவல்கள் சென்னைப் பெருமழையும் நெகிழ்ச்சியானதொரு சந்திப்பும் என்ற எனது இடுகையில் காணலாம்.

கௌசல்யாவின் மருத்துவப் படிப்பு முடியும் வரை, அவருக்கு (இயன்ற அளவில்) உதவலாம் என்ற எண்ணத்தில், சில தமிழ் வலையுலக நண்பர்களையும் கலந்தாலோசித்து, தொடர்ந்து அவரது கல்விக்கான உதவி செய்ய, கௌசல்யாவின் கல்விக்கு உதவி வேண்டி ஒரு வேண்டுகோள் இடுகை இட்டேன். இன்னும் பலப்பல நல்ல உள்ளங்கள் செய்த பொருளுதவி, கௌசல்யா படிப்பை முடிக்கும் வரையில் போதும் என்ற வகையில் அமைந்தது ! தற்போது கௌசல்யா ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் இறுதியாண்டு பயின்று வருகிறார். மிகுந்த தன்னம்பிக்கை மிக்க ஒரு பெண்ணாகவும் விளங்குகிறார். இதற்கு, நம் தமிழ் வலைப்பதிவுலகமும் ஒரு காரணம் என்று எண்ணும்போது பெருமையாக இருக்கிறது !

கௌசல்யா குறித்த எனது பதிவுகளை இங்கே காணலாம்

நண்பர்களுடன் சமூகசேவை -சமயம் கிடைக்கும்போது இவ்விணைபபில் உள்ள இடுகைகளை வாசிக்கவும்.

கௌசல்யாவின் சொந்த ஊரான அந்தியூரைச் சேர்ந்த இன்னொரு ஏழை மாணவிவின் பொறியியல் படிப்புக்கு உதவ இயலுமா என்று கௌசல்யா என்னிடம் கேட்டதின் தொடர்ச்சியாக, அப்பெண்ணின் மதிப்பெண் மற்றும் பிற சான்றிதழ்களை அவரிடம் கேட்டுப் பெற்றேன். பானுப்பிரியா என்ற அம்மாணவியின் தந்தை மண்பானை செய்யும் ஒரு தொழிலாளி. அப்பெண் மிக நல்ல மதிப்பெண்கள் பெற்றிருப்பதால், நடக்கவிருக்கும் கவுன்சலிங்கில் பொறியியல் படிப்பில் சீட் கிடைக்க பிரகாசமான வாய்ப்பு இருப்பதாகவே நினைக்கிறேன். ஆனால், குடும்பச் சூழல் காரணாமாக, பெண்ணின் தந்தை அவளை மேலே படிக்க வைக்க யோசிப்பதாக கௌசல்யா மூலம் அறியப் பெற்றேன்.

பானுப்பிரியாவின் கல்விச் செலவுக்கு, பண உதவிக்கான இந்த வேண்டுகோளை, உங்கள் முன் மீண்டும் வைக்கிறேன். உங்களால் இயன்ற தொகையை (அது சிறியதாக இருந்தாலும்) உதவியாக அளிக்குமாறு உங்களிடம் பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். உதவிக் தொகையை (அம்மாணவிக்கு சரியான வகையில் பயனளிக்கும் விதமாக) சேர்ப்பிப்பதற்கு நானும், நண்பர் ரஜினி ராம்கியும் பொறுப்பெடுத்துக் கொள்கிறோம்.

அனைத்து நண்பர்களுக்கும்:
****************************************
பண உதவி செய்ய விரும்பும், இந்தியாவிலிருக்கும் நண்பர்கள் / வெளிநாட்டிலிருந்து (ரூபாய்) காசோலையாக (அ) என் வங்கிக் கணக்குக்கு Direct credit செய்து உதவ விரும்பும் அன்பர்கள், தயவு செய்து கீழ்க்கண்ட மின்னஞ்சல்களுக்கு எழுதவும்.

balaji_ammu@yahoo.com
rajni_ramki@yahoo.com

இங்கே பின்னூட்டத்தில் உங்கள் மின்மடல் முகவரியை இட்டாலே போதும். நான் / ராம்கி உங்களுக்கு பணம் அனுப்புவதற்கான விவரங்களை (வங்கி சம்மந்தப்பட்ட மற்றும் எங்கள் முகவரி) தெளிவாக உங்களுக்கு தெரிவிக்கிறோம்.
**********************************

கல்வி மற்றும் மருத்துவ உதவிக்காக முன்னர் பணம் அனுப்பிய நண்பர்களிடம், எனது மற்றும் ராம்கியின் வங்கிக் கணக்கு தகவல்கள், நான் அப்போது அனுப்பிய மடல்களில் இருக்கும். பானுப்பிரியாவின் சான்றிதழ்கள் உங்கள் பார்வைக்கு, கீழே:









பானுப்பிரியாவின் XII மதிப்பெண்களை இத்தளத்தில் சரி பார்த்துக் கொள்ளலாம் . இது தகவலுக்காக மட்டும். தவறாக எண்ண வேண்டாம் ! அவரது பதிவு எண் 315000

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails